அரசு பள்ளி குடிநீரில் விஷம் கலந்து 30 மாணவர்களை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!
Telangana School incident
தெலங்கானாவில் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து, 30 மாணவர்களை கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரம்பூரி அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சனி முதல் திங்கள் வரை மூன்று நாள் விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் வருகைக்கு முன்பே மதிய உணவு திட்ட ஊழியர்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ள முயன்ற போது துர்நாற்றம் உணரப்பட்டது.
அதையடுத்து குடிநீர் தொட்டியை சோதனை செய்தபோது, தண்ணீரின் நிறம் மாறியதோடு நாற்றமும் வீசியது. உடனடியாக தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு எச்சரிக்கை வழங்கினார். தொடர்ந்து இது குறித்து இச்சோடா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிபுணர்களை கொண்டு தண்ணீர் மாதிரியை ஆய்வு செய்தனர். இதில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது உறுதியாகியுள்ளது.
சம்பவம் பற்றிய தகவலை அறிந்த பெற்றோர், மாணவர் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இத்தகைய துயரங்கள் நிகழக்கூடாது என வலியுறுத்தினர்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Telangana School incident