17 பேரை பலிகொண்ட ஹைதராபாத் கொடூர தீ விபத்து! பிரதமர் மோடி இரங்கல்! நிவாரணம் அறிவிப்பு!
Telangana Hyderabad Fire accident
ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற சார்மினார் அருகே ஏற்பட்ட தீவிபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குல்சார் ஹவுஸ் பகுதியில் உள்ள நகைக்கடையின் மேல் மாடியில் காலை 6.30 மணியளவில் தீப் பற்றியது. மின்கசிவே காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குப் பின்னர், 11 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புத் பணியில் ஈடுபட்டன. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், "சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி நடைபெற்றது. சிலரைக் காயங்களுடன் வெளியே கொண்டுவந்தோம்," எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். “இது மிகுந்த துயரமான விபத்து. தீயணைப்பு துறைக்கு போதிய உபகரணங்கள் இல்லாததைக் கேட்டேன். இத்தகைய சூழலில் தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்,” எனக் கூறினார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரை சந்தித்து நிவாரணம் கோர இருப்பதாகவும் அவர் கூறினார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். காயமடைந்தோர் சிறப்பான சிகிச்சை பெற உத்தரவிட்டதாகவும் கூறினார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
English Summary
Telangana Hyderabad Fire accident