மருத்துவர்கள் மீதான அலட்சிய குற்றச்சாட்டு விசாரணை; 20 ஆண்டுகளாக விதிகள் வகுக்காத மத்திய அரசு; உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!
Supreme Court issues notice to central government for not framing rules for 20 years to investigate allegations of negligence against doctors
கடந்த 2005-ஆம் ஆண்டு ஜேக்கப் மேத்யூ என்பவர் பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
‘மருத்துவர்கள் மீதான அலட்சியக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் மருத்துவக் கவுன்சிலுடன் கலந்தாலோசித்துத் தனியான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்; தன்னிச்சையாக மருத்துவர்களைக் கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவும் இது தொடர்பாக விரிவான விசாரணைக் குழுவை அமைக்கப் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முறையான சட்ட வரம்புகளோ, வழிகாட்டுதல்களோ இதுவரை உருவாக்கப்படவில்லை என்று கூறி ‘சமீக்ஷா பவுண்டேஷன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் மேலும், கூறியுள்ளதாவது:

‘தற்போதைய நடைமுறையில் மருத்துவ சிகிச்சையில் நடக்கும் அலட்சிய வழக்குகளை விசாரிக்கும் குழுக்களில் சக மருத்துவர்களே அதிகம் இருக்கின்றனர். இதனால், ஒருதலைபட்சமாக விசாரணை நடக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 52 லட்சம் மருத்துவத் தவறுகள் நடப்பதாகத் தரவுகள் கூறுகின்ற நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி 2017 முதல் 2022 வரை வெறும் 1,019 மரணங்கள் மட்டுமே மருத்துவ அலட்சியத்தால் நிகழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அமைப்பின் தோல்வியைக் காட்டுகிறதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேக்கப் மேத்யூ வழக்கின் தீர்ப்பின்படி உடனடியாக விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும், விசாரணைக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், நிபுணர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, இதுகுறித்து பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துடன், மருத்துவர்கள் மீதான மருத்துவ சிகிச்சையில் நடக்கும் அலட்சிய வழக்குகளை விசாரிப்பதற்கான விதிமுறைகளை 20 ஆண்டுகளாக வகுக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Supreme Court issues notice to central government for not framing rules for 20 years to investigate allegations of negligence against doctors