முதல்வர் மோதல் முடிவுக்கு வருமா..? சிவக்குமாரை காலை உணவுக்கு சித்தராமையா அழைப்பு..!
Siddaramaiah invited Shivakumar for breakfast
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், துணை முதல்வராக இருக்கிறார். ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, இரண்டரை ஆண்டுக்கு பின், சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டு தருவதாக சித்தராமையா வாக்குறுதி அளித்திருப்பதாக கூறப்பட்டது இதன்படி, கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்தது.
அதன்படி, கடந்த 20-ஆம் தேதியுடன் இரண்டரை ஆண்டு முடிந்துள்ள நிலையில், முதல்வர் பதவிக்கு காய் நகர்த்திய சிவகுமார், 20-ஆம் தேதி இரவு, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலரை, மேலிட தலைவர்களை சந்திக்க டில்லிக்கு அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து, முதல்வர் சித்தராமையா, பெங்களூரு வந்த கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சித்தராமையா, சிவ குமார் இருவருமே முதல்வர் பதவிக்கு முரண்டு பிடிப்பதால், பிரச்சினையை ராகுலிடம் தள்ளிவிட கார்கே முடிவு செய்தார். அதன்பின்னர், ராகுலுடன் மொபைல் போனில், 20 நிமிடங்கள் கார்கே பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது பிரச்சினை குறித்து சோனியா, ராகுலுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கார்கே கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சிவக்குமாரை சந்தித்து பேசும்படி, சித்தராமையாவுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சிவக்குமாருக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: ''காங்கிரஸ் மேலிடம் சிவக்குமாருடன் பேசியது. என்னுடனும் பேசினர். நாங்கள் இருவரும் சந்தித்து பேச உத்தரவிட்டுள்ளது. எனவே, காலை உணவுக்கு சிவக்குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். நாளை அவர் வரும்போது அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி முடிவு காணப்படும்.
காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என முன்பு கூறினேன். இன்றும் அதையே கூறுகிறேன். நாளையும் கூறுவேன். மேலிடத்தின் உத்தரவை பின்பற்றுவேன் என சிவக்குமாரும் கூறியுள்ளார்.
மேலிடம் அழைத்தால் டில்லி செல்லவும் தயாராக உள்ளேன். '' என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
Siddaramaiah invited Shivakumar for breakfast