அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக ஏர் மார்ஷெல் (ஓய்வு) ஜீதேந்திர மிஸ்ரா நியமனம்..!
Retired Air Marshal Jitendra Mishra appointed as the first CEO of Ayodhya Ram Temple Trust
அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 08 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முழு நேர தலைமை செயல் அதிகாரியை நியமிக்க அறக்கட்டளை நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், 5,585 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதற்கு கடுமையான தேர்வு முறை பின்பற்றப்பட்டது.
அதன்படி, முதல்கட்ட பரிசீலனைக்குப் பிறகு 3,577 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்ட தேர்வின்போது, குறைந்தது 470 மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வான 108 பேரிடம் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நேர்காணல் நடத்தப்பட்டது.
அதில், இறுதிச் சுற்றில் தேர்வான 16 வேட்பாளர்கள் அயோத்தியில் ஆகஸ்ட் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெற்ற நேர்காணல்களில் பங்கேற்றனர். இறுதியில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, தற்போது அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஏர் மார்ஷெல் (ஓய்வு) ஜீதேந்திர மிஸ்ரா, இந்திய விமானப் படையின் மேற்கு விமானப் படைத் தலைமைத் தளபதியாக இருந்து கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
கோயில் நிர்வாகத்தில் அதிக தொழில்முறை மேலாண்மை, நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்கானப் பணிகளை ஜீதேந்திர மிஸ்ரா மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
இவரைத்தொடர்ந்து, டெல்லியைச் சேர்ந்த மகேஷ் பாக்சந்த்கா, முன்னாள் அயோத்தி கூடுதல் அட்வகேட் ஜெனரல் மதன் மோகன் பாண்டே, நிர்மலா யாதவ் ஆகியோர் அறக்கட்டளையின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Retired Air Marshal Jitendra Mishra appointed as the first CEO of Ayodhya Ram Temple Trust