'ஹிஜாப் அணிந்த (இஸ்லாமிய) பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வருவார்'; ஒவைசி பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள கட்சிகள்..! - Seithipunal
Seithipunal


''எதிர்காலத்தில் ஹிஜாப் அணிந்த (இஸ்லாமிய) பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வருவார். இதைப் பார்ப்பதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன். ஆனால், அது நடக்கும்'' என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதின் ஒவைசி கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி  மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அசாதுதின் ஒவைசி உரையாற்றினார். அப்போது,  'பாகிஸ்தானில் உயர் அரசியலமைப்பு பதவிகளை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வகிக்க முடியும் என்பதாக அதன் அரசியலமைப்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. யார் வேண்டுமானாலும் நாட்டின் உயர் அரசியலமைப்புப் பதவிகளை வகிக்க முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து அளிக்கிறது.

எதிர்காலத்தில் ஹிஜாப் அணிந்த (இஸ்லாமிய) பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வருவார். இதைப் பார்ப்பதற்கு நான் உயிரோடு இருக்க மாட்டேன். ஆனால், அது நடக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

ஒவைசியின் இந்தப் பேச்சு குறித்து காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் கருத்து தெரிவித்துள்ளதாவது; 

சாத்தியமற்ற ஒன்றைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும், பகலில் நட்சத்திரத்தைப் பார்ப்பது போன்றது இது என்று விமர்சித்துள்ளார். நடக்க வாய்ப்பில்லாத ஒன்றைப் பற்றி அவர் ஏன் பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பியதோடு, ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஹிஜாப் அணிவது அல்லது அணியாமல் இருப்பது என்பது தனிப்பட்ட விஷயம் என பதிலடி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஷைனா என்சி, கூறுகையில், பிரதமர் பதவி காலியாக இல்லை என்றும், முதலில் உங்கள் உறுப்பினர்கள் எம்பியாகட்டும். அதன் பிறகு பிரதமர் பதவி குறித்து நீங்கள் கனவு காணலாம் என்று கூறியுள்ளார்.

அத்துடன், பெண் ஒருவர் நாட்டின் பிரதமராக வரும் காலம் வர வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அது சாதி, மதம், சமூகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அல்லாமல், அவரது நல்ல பணிகள் மற்றும் நாட்டு மக்களின் ஆதரவு ஆகியவற்றுடன் நிகழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒவைசியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா பதிலளித்து கூறியாதாவது;  ஹிஜாப் அணிந்த ஒருவர் நாட்டின் பிரதமராக வருவார் என ஒவைசி கூறுகிறார். அரசியல் சாசனம் யாரையும் தடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதோடு, நான் உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். பஸ்பண்டா (பிற்படுத்தப்பட்ட) முஸ்லிமோ, ஹிஜாப் அணிந்த ஒருவரோ உங்கள் கட்சியின் தலைவராக முடியுமா? என்று கேள்வி எழுப்பி எதிர்வினையாற்றியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political parties have reacted to Owaisis statement that a Muslim woman wearing a hijab will become the Prime Minister of India


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->