டெல்லியில் வெளுத்து வாங்கிய மழை; விமான நிலையத்தில் தண்ணீர் தேக்கம்; பயணிகள் கடும் அவதி..!
Passengers face severe hardship as Delhi airport gets waterlogged due to heavy rains
தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, 03 மணி நேர மழைப்பொழிவு தரவுப்படி, பாலம் பகுதியில் 3.4 மி.மீ மழையும், நஜப்கர் பகுதியில் 0.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது என்றும், மற்ற பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் மழை பதிவாகவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 02.15 மணி முதல் மாலை 04.15 மணி வரையிலும், மீண்டும் மாலை 05 மணி முதல் இரவு 08 மணி வரையிலும் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டது.
அதேப்போன்று, அடுத்த 03 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் 50-100 மி.மீ அளவிலான கனமழையும் பெய்யும் என்றும், அத்துடன் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ (அதிகபட்சமாக 60 கி.மீ) வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், விமான நிலையத்திற்கு வரும் மற்றும் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு வெள்ளம் வடியாததால் அரை மணி நேரமாக பயணிகள் காத்திருப்பதாகவும், இதுபோன்ற காட்சியைத் தான் பார்த்ததே இல்லை என்றும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Passengers face severe hardship as Delhi airport gets waterlogged due to heavy rains