வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஓவைசி கண்டனம்..!
Owaisi condemns the killing of Hindu youths in Bangladesh
வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களாக உள்ள ஹிந்து இளைஞர்கள் இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. திபு சந்திர தாஸ், அம்ரித் மண்டல் ஆகிய இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் மற்றும் அவர்களுக்கு எதிராக நடந்த துயர நிகழ்வுகள் வங்கதேசத்தின் அரசியலமைப்புக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், கூறியுள்ளதாவது: வங்கதேசம் மதசார்பற்ற நாடாகத் தான் உருவாக்கப்பட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத சிறுபான்மையின மக்கள் 02 கோடி பேர் வங்கதேசத்தில் வசித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பதற்றம் அதிகரிக்காது என்று தான் நம்புவதாகவும், திபு சந்திரதாஸ் மற்றும் அம்ரித் மண்டல் ஆகியோருக்கு எதிராக நடந்த துயர நிகழ்வுகள், வங்கதேசத்தின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மை இந்தியாவின் பாதுகாப்புக்கு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, சீனா மற்றும் இந்தியாவிற்கு எதிரான சக்திகள் வங்கதேசத்தில் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஓவைஸி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் மறக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நவம்பர் 24 அன்று மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, ஒடிசாவின் சம்பல்பூரில் அடித்துக் கொல்லப்பட்டார். ஜார்க்கண்டில் எம்பிஏ படித்த மாணவர் தாக்கப்பட்டார். அதில் அவர் இறந்துவிட்டார்.
எனவே, சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து பெரும்பான்மை அரசியல் எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும்போது இதுபோன்ற கும்பல் படுகொலைகள் நடக்கின்றன என்பதற்கு இவை அனைத்தும் தெளிவான எடுத்துக்காட்டுகள். இவற்றை நாம் கண்டிக்க வேண்டும் என்று அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார்.
English Summary
Owaisi condemns the killing of Hindu youths in Bangladesh