நீட் தேர்வு ரத்தால் கடும் மன உளைச்சல்: 18 வயது மாணவி தற்கொலை!
Outraged by NEET Cancellation 18-Year-Old Dies by Suicide in Maharashtra
கடந்த மே 3 அன்று நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET 2026) நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடித் தேர்வு ரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
லட்சியம் கலைந்த சோகம்:
பாதிக்கப்பட்ட மாணவி: மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் பகுதி, கோண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த மைதிலி அசோக் சோன்வாலே (18).
களத்து வீட்டில் நேர்ந்த துயரம்: கடந்த மே 16 அன்று மைதிலி தனது விவசாயத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
"கனவு உடைந்ததால் நேர்ந்த விபரீதம்" - தந்தை கண்ணீர் வாக்குமூலம்:
மாணவியின் தந்தையான 50 வயது விவசாயி அசோக் விட்டல் சோன்வாலே, நேற்று காவல் துறையினரிடம் கண்ணீருடன் அளித்த வாக்குமூலத்தில் உருக்கமாகக் கூறியுள்ளதாவது:
"என் மகள் மைதிலி எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவராகி ஏழைகளுக்குச் இலவச சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இரவு பகலாகப் படித்துக் கடுமையாக உழைத்தாள். அதற்கேற்ப, கடந்த மே 3 அன்று நடந்த நீட் தேர்வையும் மிகச் சிறப்பாக எழுதிவிட்டு, நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற திருப்தியோடு இருந்தாள்.
ஆனால், வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தேர்வு மொத்தமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தவுடன் அவள் முற்றிலும் உடைந்து போனாள். 'நான் இவ்வளவு நன்றாகப் படித்துத் தேர்வு எழுதியும் ரத்து செய்துவிட்டார்களே, என் எதிர்காலம் என்னவாகும்?' என்று பயந்து கவலையிலேயே இருந்தாள். அந்த கடுமையான மன அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், என் மகள் இந்த விபரீத முடிவை எடுத்துக்கொண்டாள்" என்று கதறினார்.
மனநல உதவிக்கான விழிப்புணர்வு:
தேர்வுத் தோல்விகளோ அல்லது தற்காலிகத் தடைகளோ எதற்கும் இறுதித் தீர்வல்ல. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடவும், உரிய மனநல ஆலோசனை பெறவும் தமிழக அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் 24 மணி நேரமும் செயல்படும் இலவச உதவி எண்களை அறிவித்துள்ளன:
தமிழக அரசின் மனநல உதவி எண்: 104
சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050, 044-24640060
English Summary
Outraged by NEET Cancellation 18-Year-Old Dies by Suicide in Maharashtra