'பீஹார் தோல்விக்கு எஸ்ஐஆரும், ஓட்டுத் திருட்டுமே காரணம்': புலம்ப தொடங்கியுள்ள எதிர்க்கட்சிகள்..!
Opposition parties complain that SIR and vote rigging are the reasons for Bihars defeat
பீஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றிப் பெற்றுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் எஸ்ஐஆர் மற்றும் ஓட்டு திருட்டு போன்றவையே தோல்விக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் தற்போது கூறிவருகின்றன.
இதில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்துள்ளன. பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வாக்களித்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றன.
இப்படியான சூழலில் தோல்விக்கு எஸ்ஐஆரும், ஓட்டுத் திருட்டுமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி இருக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது;

''கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீஹார் வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் தருகிறது. தொடக்கம் முதலே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது ஆகும்.
காங்கிரசும், இண்டி கூட்டணியும் தேர்தல் முடிவை ஆழமாக பகுப்பாய்வு செய்து ஜனநாயகத்தை காக்க எங்கள் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் திறம்பட செயல்படுவோம்.'' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, காங்கிரசின் பீஹார் பார்வையாரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட் கூறுகையில்; பீஹார் தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் பிரசாரத்தின் போதும் கூட பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 தரப்பட்டது. தேர்தல் கமிஷன் இதை பார்த்துக் கொண்டு வாய் மூடி மவுனியாக இருந்தது.
ஏன் இதுபோன்ற செயல்களை தேர்தல் கமிஷன் தடுக்கவில்லை..? இதை தான் ராகுல் ஓட்டுத் திருட்டு என்றார். ஆளும்கட்சியுடன் தேர்தல் கமிஷன் இணைந்து செயல்படுகிறது.'' என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன்கெரா கூறுகையில், ''இந்த தேர்தலானது தலைமை தேர்தல் கமிஷனுக்கும், பீஹார் மக்களுக்குமான நேரடி போட்டி. தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், பீஹார் மக்களை விட அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ''பீஹாரில் எதிர்க்கட்சிகள் மோசமாக தோற்க எஸ்ஐஆர் காரணம். இது ஒரு தேர்தல் சதி. பீஹாருக்கு பின்னர், தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் அல்லது வேறு எந்த மாநிலத்திலும் சாத்தியமில்லை. தேர்தல் சதி அம்பலாகிவிட்டது''என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Opposition parties complain that SIR and vote rigging are the reasons for Bihars defeat