மும்பை 7/11 குண்டுவெடிப்பு: 9 வருட சிறைவாசத்திற்குப் பின் ரூ.9 கோடி இழப்பீடு கோரும் அப்துல் வாஹித்...! காரணம் என்ன?
Mumbai 7 11 blasts Abdul Wahid demands Rs 9 crore compensation after 9 years in prison What reason
2006-ஆம் ஆண்டு மும்பை நகரை அதிரவைத்த '7/11 தொடர்வண்டி குண்டுவெடிப்பு' சம்பவம் நாடே மனமுடைந்து போன தருணமாகும். அச்சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்தும், 824 பேர் படுகாயமடைந்தும் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் 2015-இல் சிறப்பு நீதிமன்றம் நடத்திய விசாரணையில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த ஜூலை மாதம், மும்பை உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை முற்றிலும் ரத்து செய்தது. “அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை” என நீதிபதிகள் கடுமையாக சுட்டிக்காட்டினர்.
இந்த தீர்ப்பு, குற்றம் சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பத்தினருக்கும், ஏற்கெனவே 2015-இல் குற்றமற்றவர் என விடுதலையான 13வது சந்தேக நபர் அப்துல் வாஹித்துக்கும் ஒரு விடுதலையின் சுவாசமாக அமைந்தது.
ஆனால், சும்மா விடுபடுவதில் அப்துல் வாஹித் திருப்தியடையவில்லை. அவர், “2006 முதல் காவல் கண்காணிப்பில் நான் அனுபவித்த கொடுமைகளுக்கும், என் பெயர் மீது சமூகத்தில் சுமத்தப்பட்ட களங்கத்திற்கும், என் கல்வி, தொழில், வாழ்வை சிதைத்த 9 ஆண்டு சிறைவாசத்திற்கும் நியாயமான இழப்பீடு வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும், மகாராஷ்டிரா மனித உரிமை ஆணையத்திற்கும் மனு தாக்கல் செய்திருக்கும் அவர், ரூ.9 கோடி இழப்பீடு மட்டுமின்றி, தனது மறுவாழ்விற்கும் அரசே வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அப்துலின் கருத்துப்படி, காவலர்கள் சித்திரவதையால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் இன்றும் தன்னை துன்புறுத்துகின்றன.மேலும், “சமூகத்தில் களங்கப்பட்ட பெயரை சுத்திகரிக்க அரசே முன்வர வேண்டும்” என அவர் தனது மனுவில் வேதனை கலந்த குரலில் தெரிவித்துள்ளார்.
English Summary
Mumbai 7 11 blasts Abdul Wahid demands Rs 9 crore compensation after 9 years in prison What reason