பள்ளிக்குள் புகுந்த கும்பல்… கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் சூறை...! -.அசாமில் 4 பேர் கைது
mob entered school Christmas decorations vandalized 4 arrested Assam
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புனித மேரி பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த கும்பல், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம், குடில் மற்றும் வண்ண விளக்குகளை அடித்து நொறுக்கி சூறையாடியது.

மாணவர்களுக்காக மகிழ்ச்சியுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த பள்ளி வளாகம், திடீரென அரங்கேறிய இந்த ரகளையால் பதற்றக் களமாக மாறியது. கல்வி நிறுவனங்களில் மத ரீதியான பண்டிகை அலங்காரங்கள் செய்யக்கூடாது என கூறி, பள்ளி நிர்வாகத்தினரையும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், நல்பாரி காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். விசாரணையின் முடிவில், இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள்மீது சட்டவிரோதமாகக் கூடுதல், அத்துமீறி நுழைதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் மத ரீதியான மோதல்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
English Summary
mob entered school Christmas decorations vandalized 4 arrested Assam