பாஜகவை வீழ்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகர் டெல்லியில் இண்டியா கூட்டணி சார்பில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையை திருச்சி சிவா எம்.பி. வாசித்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

டெல்லி மாநிலத்தின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தி.மு.க.வின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் பா.ஜ.க. அரசு தனது ஏவல் படைகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரைக் கைது செய்திருப்பது தோல்வி பயத்தின் வெளிப்பாடு ஆகும். இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்கு, தி.மு.க. உறுதியாகத் துணை நிற்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது மூலம் இந்தியா கூட்டணியை உடைக்க நினைத்த மோடியின் எண்ணம் தோல்வியடைந்துவிட்டது.

சர்வாதிகாரத்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவோம். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டதை, தேர்தல் பிரசாரத்தின்போது காண முடிகிறது. அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பதைப் போல, பா.ஜ.க.வின் தாக்குதல் அதிகமாக அதிகமாகக் கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். இதைதான் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறோம்.

சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி பாஜக எங்களை மிரட்டுகிறது; இதில் மிரண்டு பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை; பா.ஜ.க.வின் ஆணவத்துக்கு அடங்காதவர்களை கைது செய்கின்றனர்; இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதைப் போல இருக்கிறது.

அடக்குறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை. ஆணவக்காரர்களின் ஆட்டத்தை மக்கள் அனுமதித்ததும் இல்லை. "இந்தியா" கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். மக்களின் வாக்குகளாலே பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தியா கூட்டணி கட்சிகள் உடனடியாக தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்க வேண்டும், தொகுதிப் பங்கீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்.

அருமை நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியில் வருவார். 'இந்தியா' கூட்டணியை வலிமைப்படுத்தவும், இந்தியாவை செழுமைப்படுத்தவும் அவர் விரைவில் வருவார். போராட்டக் களத்துக்கு வந்திருக்கும் அனைத்துத் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நான் தினந்தோறும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகிறேன். பாசிச பாஜகவை வீழ்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். பரப்புரை பயணத்தில் இருப்பதால் என்னால் டெல்லி வர இயலவில்லை. நேரில் வர இயலாமைக்கு பொருத்தருளக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin speech about delhi cm kejriwal arrest


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->