அரசு துறைகளில் முறைகேடு.. இந்திய கணக்காய்வு தணிக்கை துறை அறிக்கை..! - Seithipunal
Seithipunal


இந்திய கணக்காய்வு தணிக்கை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,'பல்வேறு அரசு துறைகளில் 321 பணிகளில் ரூ. 28.05 கோடிக்கான அரசு பணம் முறைகேடு, இழப்பு, திருட்டு மற்றும் கையாடல்கள் செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் அறிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் முதன்மை கணக்கு ஆய்வுத்தலைவர் ஆனந்த் தெரிவித்ததாவது,

புதுச்சேரியில் 2020-21ம் நிதியாண்டில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவர் அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் புதுச்சேரி அரசு கணக்கில் தணிக்கை செய்தோம்.புதுச்சேரி அரசின் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டை விட ரூ. 891 கோடி குறைந்தது. இதனால் ரூ. 1370 கோடி, வருவாய் பற்றாக்குறையில் முடிந்தது.

குறிப்பாக, 2019--20ல் ரூ. 327 கோடியாக இருந்த மூலதன செலவினம் 2020-21ல் ரூ. 240 கோடியாக குறைந்தது.இதனால் 2019--20ல் ரூ. 381 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை 2020--21ல் ரூ. 1615 கோடியாக அதிகரித்தது. ஏனெனில் ஜி.எஸ்.டி., இழப்பீட்டுக்கான உதவி மானியத்துக்கு பதிலாக, மத்திய அரசு ரூ. 742 கோடியை கடனாக விடுவித்தது முக்கிய காரணமாகும்.

2020--21ல் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டை விட ரூ. 891 கோடியாக, அதாவது,13.14 சதவீதமாக குறைந்தது.அத்துடன் ரூ. 552 கோடி ஐந்தாண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ளது.பொதுப்பணித் துறை மற்றும் மின்துறைகளில் 58 முடிவுறாத திட்டங்களினால் ரூ. 212.95 கோடி முடக்கப்பட்டது.2016--17ல் ரூ. 8299 கோடியாக இருந்த நிலுவைக் கடன்கள் 2020--21ல் ரூ.10,894 கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்த பட்ஜெட்டில், ரூ. 9256.04 கோடியில் ரூ. 8,361.93 கோடி மட்டுமே செலவிடப்பட்டு, ரூ. 894.11 கோடி செலவிடப்படவில்லை.கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமுள்ள 33 மானியங்களில் 19 மானியங்களில் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் செலவிடப்படவில்லை. ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட 10 பணிகளில் எந்த ஒரு செலவும் செய்யப்படாமல் இருந்தது.

ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று, வரிவிதிப்பு மற்றும் அனுமதிச்சீட்டு ஆகியவற்றுக்கு சேவைக் கட்டணமாக போக்குவரத்துத் துறையால் வசூலிக்கப்பட்ட ரூ. 8.7 கோடி அரசு கணக்குக்கு வெளியே தனிக்கணக்கில் வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

மொத்தம் 788 பணிகளில் ரூ. 462.25 கோடிக்கான பயன்பாட்டு சான்றிதழ்கள் நிலுவையில் இருந்தன. இதில் ரூ. 39.88 கோடிக்கான 226 பயன்பாட்டு சான்றுகள் 9 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தன.அரசிடம் அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ.129.14 கோடிக்கான 1460 பணிகளுக்கான தற்காலிக முன்பணம் கணக்கு தரப்படவில்லை.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 228 பணிக்கான தற்காலிக முன்பணமாக தரப்பட்ட ரூ. 19.26 கோடிக்கு கணக்கு தரப்படவில்லை.பல்வேறு அரசு துறைகளில் 321 பணிகளில் ரூ. 28.05 கோடிக்கான அரசு பணம் முறைகேடு, இழப்பு, திருட்டு மற்றும் பணம் கையாடல்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் மின்துறையில் 255 பணிகள் இடம்பெற்றன.

2019--20ம் ஆண்டு வரை முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் நுகர்வோருக்கு தரப்பட்ட மின்சாரத்துக்கும், செலவுக்கும் இடையிலான இடைவெளி ரூ. 97.57 கோடியிலிருந்து ரூ. 375.89 கோடியாக உயர்ந்துள்ளது.ஆண்டுகணக்குகளை இறுதி செய்வது தாமதமானது. இதனால் வருவாய் இடைவெளியை விரைந்து சரி செய்யும் வாய்ப்பை மின்துறை இழந்தது.

மின்துறை கட்டண வசூல் மோசமான திறனால் மார்ச் 2020ல் ரூ. 709.6 கோடி நிலுவைத்தொகை இருந்தது. மின் திருட்டு தடுப்புக்குழுவும் சரியாக செயல்படவில்லை. மொத்த நுகர்வோர்களில் 0.05 சதவீதம் மட்டுமே ஆய்வு செய்துள்ளனர் என்று முதன்மைத் தலைவர் தெரிவித்துள்ளார். இவர்களுடன் முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி உடனிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malpractice in government departments


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->