'பாஜக முழுமையாக தோல்வி அடைந்துள்ளது; வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்'; மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்..!
Mallikarjun Kharge demands Dharmendra Pradhans resignation over the question paper leak issue
''கடந்த 10 ஆண்டுகளில் 90 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த மோசடியாலும் ஊழலாலும் 09 கோடி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாட்டின் விழிப்புணர்வு உள்ள இளைஞர்கள் ஒரே விஷயத்தைத்தான் கோருகிறார்கள். அது தர்மேந்திர பிரதானின் ராஜினாமா'' என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
'' நீட் மறுதேர்வு விவகாரத்தில் தற்காலிகமாக டெலிகிராம் செயலியை மோடி அரசு முடக்கியுள்ளது. உண்மையில் மோடி முதலில் கோர வேண்டியது, லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை முடக்கிய தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத்தான்.
இந்திய விமானப் படையை ஈடுபடுத்துதல், டெலிகிராம் செயலியை முடக்குதல் அல்லது வினாத்தாள் கசிவு மாபியாவை காப்பாற்ற சிறிய குற்றவாளிகளை மட்டும் பிடித்தல் போன்ற செயல்களை மோடி அரசு செய்வதற்குக் காரணம், கடந்த 10 ஆண்டுகளில் 90 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்திருப்பதுதான்.
இந்த மோசடியாலும் ஊழலாலும் 9 கோடி இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் தனது தோல்விகளை மூடி மறைக்கப் போகிறது?
வினாத்தாள் கசிவு காரணமாக அரை டஜன் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆனால், அதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பல ஆண்டுகளாகத் தேர்வுக்காக தங்கள் பிள்ளைகளை தயார்படுத்த கடன் வாங்கிய பெற்றோர் பலர் உள்ளனர். ஆனால், NEET, SSC, UGC-NET, CUET, பிற தேர்வுகள் என ஒவ்வொன்றிலும் வினாத்தாள்கள் ஒன்றன் பின் ஒன்றாக கசிந்துள்ளன.

நிலைமை எந்த அளவுக்கு மோசமாகி உள்ளது என்றால், UPSC தேர்வு முடிவுகளில் நடந்த பெரும் மோசடிகளை 17-18 வயதுடைய திறமையான மாணவர்களே வெளிச்சத்துக்குக் கொண்டு அளவுக்கு சூழல் உள்ளது. இப்போது, நம்பகத்தன்மையின் உச்சமாகக் கருதப்பட்ட UPSC தேர்வும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் விழிப்புணர்வு உள்ள இளைஞர்கள் ஒரே விஷயத்தைத்தான் கோருகிறார்கள். அது தர்மேந்திர பிரதானின் ராஜினாமா. பொறுப்புக் கூறலுக்கான முதல் சோதனை இதுவே. துரதிருஷ்டவசமாக இந்த சோதனையில் பாஜக முழுமையாக தோல்வி அடைந்துள்ளது''என கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Mallikarjun Kharge demands Dharmendra Pradhans resignation over the question paper leak issue