மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது - சஞ்சய் ராவுத் கடும் குற்றச்சாட்டு!
maharastra CM law and order UPD
மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளதாகவும், மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவுத் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் பேட்டியில், “மாநிலத்தில் சட்டத்திற்கு எந்த மரியாதையும் இல்லை. உள்துறை அமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு உணர்ச்சி அற்றும், பொறுப்பு உணர்வில்லாமலும் செயல்படுகிறது” என்றார்.
சதாராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது, மும்பையில் முன்னாள் காதலனால் 24 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை மகாராஷ்டிராவின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய முக்கிய விஷயங்களில் ஃபட்னவீஸ் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சிகளுடன் அரசியல் வாதங்களில் ஈடுபட்டு, அவர்கள்மீது பழிச்சொல்லும் பணிகளில் மட்டுமே மும்முரமாக உள்ளார் என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க காவல்துறையினரை பயன்படுத்துவது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
“காவல்துறை அதிகாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், கட்சியின் பணியாளர்களாக செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதுவே வன்முறை, துன்புறுத்தல், தற்கொலை போன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது,” என சஞ்சய் ராவுத் கடுமையாக விமர்சித்தார்.
பெண் டிஜிபி ரஷ்மி சுக்லா தலைமையில் காவல்துறை இருந்தும், மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. “உள்துறை தற்போது மலைப்பாம்பு போல அசையாமல் கிடக்கிறது; நிர்வாகத்தின் மீது அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை” என அவர் சாடினார்.
English Summary
maharastra CM law and order UPD