சில்லறை பணம் மாயமா...? ரூ.10, 20, 50 நோட்டுகள் தட்டுப்பாடு…! - அன்றாட வாழ்க்கை பாதிப்பு! - Seithipunal
Seithipunal


மனித நாகரிகத்தின் பொருளாதார பயணம் பண்டமாற்று முறையிலிருந்து தான் தொடங்கியது. காலப்போக்கில் மனிதர்கள் ஒரே இடத்தில் மட்டுமின்றி, நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கு அப்பாலும் சென்று பொருட்களை வாங்கி விற்கத் தொடங்கினர். இதனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, எளிதாக பரிமாறக்கூடிய ஒரு பொதுவான ஊடகமாக நாணயங்கள் உருவானது.

ஆரம்பத்தில் ராஜமுத்திரை பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இந்தியாவில் நாணயங்களுக்கு மாற்றாக ரூபாய் நோட்டுகள் அறிமுகமானது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான். அதன் பின்னர், நாட்டின் மத்திய வங்கி ஆகிய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிடத் தொடங்கியது.

ஒரு காலத்தில் 1, 2, 5, 10, 20, 50, 100, 500, 1,000 மற்றும் 2,000 ரூபாய் வரை பல்வேறு மதிப்புகளில் ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பரவலாகபயன்படுத்தப்பட்டன. ஆனால் காலப்போக்கில் முதலில் ரூ.1,000 நோட்டுகள், பின்னர் ரூ.2,000 நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டன.

டிஜிட்டல் இந்தியா முயற்சியின் கீழ் டிஜிட்டல் பண பரிமாற்றம் ஊக்குவிக்கப்பட்டாலும், ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை முழுமையாக மக்கள் வாழ்க்கையிலிருந்து அகற்ற முடியாது என்பதே நிஜம். குறிப்பாக சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கான தேவை இன்றும் அதிகமாகவே உள்ளது.இன்றைய சூழலில் 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் எளிதில் கிடைத்தாலும், 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் கடும் தட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கிடையே, ரிசர்வ் வங்கி ரூ.2 மற்றும் ரூ.5 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தி, அதற்கு பதிலாக 50 காசுகள் முதல் 20 ரூபாய் வரை நாணயங்களை வெளியிட்டது.ஆனால் நடைமுறையில், பல கடைகளிலும், பேருந்துகளிலும் கூட 5, 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நிலை தொடர்கிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி பலமுறை அறிவுறுத்தியும், பொதுமக்களிடையே இதற்கான மாற்றம் ஏற்படவில்லை.இந்த நிலையில், அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இருந்தாலும், 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாததால் வங்கிகளில்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த சிறிய மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் 31.7 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கு இந்த நோட்டுகள் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

ஆட்டோ, பஸ் கட்டணம் செலுத்த மளிகை, காய்கறி வாங்க கிராமப்புற ஏழை மக்கள் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்ய குழந்தைகளுக்கு பள்ளிக்கூடச் செலவுக்காக பணம் கொடுக்க ஓட்டல்களில் இட்லி, தேநீர் வாங்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் அத்தியாவசியமாகி விட்டன.

எனவே, மக்களின் அன்றாட வாழ்க்கை தேவைகளையும், குறிப்பாக ஏழை, கிராம மற்றும் நடுத்தர மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி உடனடியாக ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை தேவையான அளவில் அச்சிட்டு புழக்கத்தில் விட வேண்டும் என்பதே தற்போது பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

loose change disappearing Shortage 10 20 and 50 notes Daily life affected


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->