லடாக்கு போராட்டம், வன்முறை, கைது!- கணவரை காப்பாற்ற போராடும் சோனத்தின் மனைவி
Ladakh protests violence arrests Sonam wife fights save her husband
லடாக்கில் தனி மாநில அந்தஸ்தும், 6-வது அட்டவணையில் சேர்ப்பும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காலநிலை ஆர்வலர் மற்றும் கல்வியாளர் சோனம் வாங்சுக் கடந்த செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.அவருக்கு ஆதரவாக, தலைநகர் லேவில் செப்டம்பர் 24 அன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் பெருமளவில் இளைஞர்கள் பங்கேற்றனர்.
ஆனால் அங்கு காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்ததோடு, 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்து, அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.ஆனால், வன்முறையைத் தூண்டியதாக குற்றஞ்சாட்டி, செப்டம்பர் 26 அன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (NSA) அவர் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ, தனது கணவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.“கணவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரமாகியும், அவரது உடல்நலம், நிலை, கைது செய்யப்பட்ட காரணம் குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை” என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாகவும், தனது கணவரின் விடுதலைக்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு உடனடி தலையீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.இதற்கிடையில், லே காவலர்கள் வாங்சுக் பாகிஸ்தான் சென்றதை சுட்டிக்காட்டி, அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உண்டு எனக் குற்றம் சாட்டினர்.
இதை மறுத்த அங்மோ, “பிப்ரவரியில் பாகிஸ்தானில் ஐ.நா. மற்றும் டான் மீடியா இணைந்து நடத்திய காலநிலை மாற்ற மாநாட்டில் சோனம் பங்கேற்றார். அதில் எவ்வித குற்றமும் இல்லை. அந்த மேடையிலேயே அவர் பிரதமர் மோடியின் ‘மிஷன் லைஃப்’ திட்டத்தை பாராட்டியிருந்தார்” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், “என் கணவர் மீது துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டு, உளவு பார்த்தார் என பொய்யாக குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையை நிரூபிக்கும் அனைத்து ஆவணங்களையும் நாங்கள் சிபிஐக்கு கொடுத்துவிட்டோம். ஆனால் சோனமை அவதூறு செய்யவும், 6-வது அட்டவணை இயக்கத்தை பலவீனப்படுத்தவும் ஒரு இருண்ட அரசியல் வேலை நடக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
English Summary
Ladakh protests violence arrests Sonam wife fights save her husband