'டிஜிசிஏ' உத்தரவு வாபஸ்: நாளை முதல் விமானங்கள் இயக்கம் சீராகும் என அறிவிப்பு..!
It has been announced that flights will resume normal operations from tomorrow as the DGCA order has been withdrawn
கோவை விமான நிலையத்தில் இன்று 15-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வு நேரத்தை ‘டிஜிசிஏ’ வாபஸ் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் விமானங்கள் இயக்கம் சீராகும் என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான விமான சேவைகள் இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்தவை.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் உள்ளடக்கிய ‘கேபின் க்ரூ’ ஓய்வு நேரத்தை 36-லிருந்து 48 மணி நேரமாக அதிகரித்தது. இதனால் நாடு முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழகத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே உள்ளிட்ட பல நகரங்களுக்கு இன்று செல்லவிருந்த 16-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஓய்வு நேரம் தொடர்பாக ‘டிஜிசிஏ’ வெளியிட்ட உத்தரவு காரணமாக கோவை உள்ளிட்ட நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இன்று மாலை உத்தரவை வாபஸ் பெறுவதாக ‘டிஜிசிஏ’ அறிவித்தது. இதனால் நாளை முதல் விமானங்கள் இயக்கம் சீராகும் என நம்புகிறோம். விமானங்கள் இயக்கம் தொடர்பான தகவல்களுக்கு விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகளை பயணிகள் தொடர்பு கொள்ளலாம். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
It has been announced that flights will resume normal operations from tomorrow as the DGCA order has been withdrawn