ஒரு நபர் ஆண்டுக்கு இவ்வளவு கிலோ உணவை வீணடிக்கிறாரா...? - ஐ.நா. அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி உண்மை
Is one person wasting this much food every year shocking truth revealed UN report
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வு அறிக்கை, உலக நாடுகளில் தனிநபர்கள் ஆண்டுதோறும் உருவாக்கும் உணவுக் கழிவுகளின் அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 79 கிலோ உணவுக் கழிவுகளை உருவாக்குகிறார் என்பது தெரியவந்துள்ளது.இந்த பட்டியலில், இந்தியா ஆண்டுக்கு தனிநபர் அடிப்படையில் 55 கிலோ உணவுக் கழிவுகளை உருவாக்கும் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு, சமைத்து மீதமிருக்கும் உணவுகள், காய்கறி–பழத் தோல்கள், கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகில் குறைந்த அளவில் உணவுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் ரஷியா முன்னிலை வகிக்கிறது.
அங்கு ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 33 கிலோ மட்டுமே உணவுக் கழிவுகளை உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு மாறாக, உணவுக் கழிவுகளில் உச்ச அளவை எட்டும் நாடுகளின் பட்டியலில் மாலத்தீவு முதலிடம் பிடித்துள்ளது.
அங்கு ஒருவரால் ஆண்டுக்கு 207 கிலோ உணவுக் கழிவுகள் உருவாகின்றன. இதனைத் தொடர்ந்து எகிப்து (163 கிலோ), ஈராக் (143 கிலோ), பாகிஸ்தான் (130 கிலோ), மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியா (தலா 105 கிலோ), ஆஸ்திரேலியா (98 கிலோ), தென் கொரியா (95 கிலோ), பிரேசில் (94 கிலோ) போன்ற நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐ.நா. வெளியிட்டுள்ள இந்த ஆய்வில் உணவுக் கழிவுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதனுடன் காகிதம், பிளாஸ்டிக், துணிகள் மற்றும் பிற வீட்டு கழிவுகளையும் சேர்த்தால், ஒட்டுமொத்த கழிவுகளின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதன்படி, இந்தியாவில் ஒரு நபர் நாளொன்றுக்கு சராசரியாக 0.35 முதல் 0.6 கிலோ வரை கழிவுகளை உருவாக்குவதாக எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு மொத்தமாக 125 கிலோ முதல் 200 கிலோ வரை கழிவுகள் உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, பழைய செல்போன்கள், சார்ஜர் வயர்கள், மின்சாதனங்கள் போன்றவற்றால், ஒருவருக்கு ஆண்டுக்கு சுமார் 2 கிலோ அளவிற்கு மின் கழிவுகள் உருவாகின்றன என்ற மற்றொரு புள்ளிவிவரமும் வெளியாகியுள்ளது.
உணவுக் கழிவுகளாக இருந்தாலும், மின் கழிவுகளாக இருந்தாலும், அவற்றை முறையாக பிரித்து மறுசுழற்சி செய்தால், சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்துக்கும் பெரும் பயன் கிடைக்கும் என்பது நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
English Summary
Is one person wasting this much food every year shocking truth revealed UN report