சர்வதேச அமைதி தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக சமாதான முயற்சியின் போது ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹமர்சீல்ட் 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது வரலாற்று சுவடாக பதிவாகியுள்ளது. இவர் உயிர் துறந்த நாளையே உலக அமைதி தினமாக அனுசரிக்கின்றோம்.
இதனை அடுத்து 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா. பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் ஏற்பட்ட கசப்பான மற்றும் சமாதானமற்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களினால் உலக சமாதான தினத்தை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டது.
மனித உள்ளங்களினால் தான் போர் எண்ணம் உருவாக்கப்படுவதால் மனித உள்ளத்தாலே அமைதிக்கான அரண்களும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே யுனெஸ்கோவின் வாசகமாக அமைந்துள்ளது.
இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இன்று மட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

உலக அல்சைமர் தினம்!.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாய் மூளையின் செல்களை சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, நம்மை நமக்கே மறக்க வைத்துவிடும் இந்த அல்சைமர் நோய். 65 வயது தாண்டியவர்களை அதிகம் பாதிக்கும்.
இந்நோயைப் பற்றி முதன்முதலில் 1906 ல் ஜெர்மனியைச் சார்ந்த மருத்துவரான அலோயிஸ் அல்சைமர் உலகுக்கு எடுத்துரைத்தார்.
இந்நோயால் மூளை உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு ஆகியவை ஏற்படுகிறது. உலக மக்களின் மரணத்திற்கான காரணங்களில் இந்த நோய் ஆறாவது இடம் பெற்றிருக்கிறது.