அமெரிக்காவுக்கான பார்சல் சர்விஸ் ஆகஸ்ட் 25 முதல் நிறுத்தம்: இந்தியா போஸ்ட் அதிரடி..!
India Post to stop parcel service to US from August 25
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். ஆனால், அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டுள்ளது.
இந்த வரி விதிப்பு காரணமாக வரும் ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி அமெரிக்கா வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 'ரூ.70 ஆயிரம் (800 டாலர்) மதிப்பு வரையிலான சரக்குகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரிவிலக்கு திரும்பப் பெறப்படுகிறது என்று குறிப்பிட்டது. வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல், அனைத்து தபால் பொருட்களும், அவற்றின் மதிப்பைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது.

அதாவது.சுமார் ரூ.9,000 மதிப்புள்ள (100 டாலர்) பரிசுப் பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும்,' என குறிப்பிட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 25-க்குப் பிறகு அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் தபால் பார்சல்களை அமெரிக்க விமானங்களில் ஏற்றிச் செல்ல அனுமதியில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக, வரும் ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு பார்சல்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா போஸ்ட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 25 முதல் கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் சுமார் ரூ.9,000 (100 டாலர்) மதிப்புள்ள பரிசுப் பொருட்களைத் தவிர்த்து, அமெரிக்காவுக்கான அனைத்து வகையான பார்சல்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே பார்சல்களை அனுப்ப பதிவு செய்தவர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமத்திற்கு தபால் துறை மிகவும் வருந்துகிறது. மேலும் அமெரிக்காவுக்கான முழு சேவைகளையும் விரைவில் மீண்டும் தொடங்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்துள்ளது. இதேப்போல, ஆஸ்திரியா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவுக்கான தபால் பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
India Post to stop parcel service to US from August 25