'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் ஆலோசனை!
India alliance party leaders will meet for consultation in Delhi tomorrow
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில்ஆலோசனை நடத்துகிறார்கள்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 21-ந் தேதிவரை நடக்கிறது. முன்னதாக 'ரக்ஷா பந்தன்' பண்டிகை மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.
இந்தநிலையில் இந்த கூட்ட தொடரில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றியும், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியது பற்றியும் மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது. பஹல்காம் தாக்குதல், காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், ஆமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பிரச்சினைகளையும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று தெரிகிறது.
இந்தநிலையில் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 20-க்கு மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது. டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இக்கூட்டம் நடக்கிறது என்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
மும்பையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், ''டெல்லியில் 'இந்தியா' கூட்டணி கூட்டம் நடக்கிறது. ஜூலை 19-ந் தேதி எங்களுக்கு உகந்ததாக இருக்கும்'' என்று கூறினார்.
இந்தநிலையில் பீகாரில் தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக நாடாளுமன்றத்தில் பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடிக்கும் என்று தெரிகிறது.
English Summary
India alliance party leaders will meet for consultation in Delhi tomorrow