மதம் மாறியவர்களுக்கான 'BCM' சான்றிதழ் அரசாணை ரத்து...! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எஸ்டிபிஐ வலியுறுத்தல்...!
Government order BCM certificate converts revoked Sdpi urges appeal Supreme Court
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்து, சமூகநீதிக்கு எதிரான பின்னடைவு இது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’ சான்றிதழ் வழங்கி, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டு பலன்களை பெற வழிவகை செய்த 2024-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை எண் 31-ஐ சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை, ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டகால சமூகநீதி கோரிக்கைக்கு முக்கியமான பதிலாக அமைந்திருந்தது. அந்த அடிப்படையில், இந்த தீர்ப்பு சமூகநீதி கொள்கைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
மதமாற்றம் என்பது ஒருவரின் ஆன்மீக நம்பிக்கையை மாற்றக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவர் பிறப்பால் சந்தித்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை ஒரே நாளில் மறைந்து விடாது.இந்த அடிப்படை சமூகநீதி கண்ணோட்டத்தையும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் விரிவான பரிந்துரைகளையும் அடிப்படையாகக் கொண்டே இந்த அரசாணை உருவாக்கப்பட்டது.
ஆனால், இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கிய நிலையை சரிசெய்வதாகும் என்ற உண்மையை புறக்கணித்து, மதக் கோட்பாடுகளை மட்டுமே முன்னிறுத்தி இந்த விவகாரத்தை நீதிமன்றம் அணுகியிருப்பது வருத்தமளிக்கிறது.இது சமூகநீதியின் ஆழமான உண்மைகளை கவனத்தில் கொள்ளாத அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.
மதமாற்ற உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். ஆனால், மதம் மாறிய ஒரே காரணத்திற்காக ஒருவர் ஏற்கனவே அனுபவித்து வந்த இடஒதுக்கீட்டு பாதுகாப்பை பறிப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகள் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதலாகும்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராகி, அரசாணையின் சட்டப்பூர்வ நிலை மற்றும் அவசியத்தை தெளிவாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்த போதிலும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக சமூகநீதி சார்ந்த வழக்குகளில் நீதிமன்றங்களின் அணுகுமுறை, சமூகத்தின் எதார்த்தமான நிலைகளை விட கடுமையான சட்ட விளக்கங்களும் கோட்பாட்டு பார்வைகளும் சார்ந்ததாக மாறி வருவது கவலைக்கிடமான ஒன்றாகும்.
எனவே, சமூகநீதியை பாதுகாக்கும் பொறுப்பின் அடிப்படையில் தமிழக அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.மேலும், சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும், அரசாணை எண் 31-ன் சட்டப்பூர்வ தன்மையையும் நிலைநிறுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
English Summary
Government order BCM certificate converts revoked Sdpi urges appeal Supreme Court