உறையூர் சேலை முதல் தூயமல்லி அரிசி வரை… GI முத்திரை பெற்ற தமிழ்நாட்டு பெருமை...!
From Uraiyur sarees Thooyamalli rice Tamil Nadu pride GI tag
ஒரு பொருளின் தரம், தயாரிப்பு முறை, தனிச்சிறப்புகள் ஆகியவை அந்தப் பகுதியின் மண், காலநிலை, மரபுத் திறமை மற்றும் மக்களின் வாழ்க்கை முறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும்போது, அந்தப் பொருளுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமே புவிசார் குறியீடு (Geographical Indication – GI).இந்த புவிசார் குறியீடு, ஒரு பொருளின் பூர்வீகத்தை உலகம் முழுவதும் அறிவிக்கும் அடையாளச் சின்னமாக திகழ்கிறது.
நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது, அது உண்மையில் அந்த இடத்திலேயே உருவான தரமான தயாரிப்புதான் என்பதற்கு நம்பிக்கைக்குரிய சான்றிதழாக இது விளங்குகிறது.

விவசாய விளைபொருட்கள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கை வளங்கள், கைத்தொழில் தயாரிப்புகள் என பல்வேறு துறைகளில் உருவாகும் பொருட்களுக்கு இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தத்தில், இது ஒரு மண்ணின் வரலாறையும், ஒரு சமூகத்தின் உழைப்பையும், ஒரு கலாசாரத்தின் அடையாளத்தையும் உலகம் முன் உயர்த்திக் காட்டும் கவுரவச் சின்னமாகும். அதே நேரத்தில், போலி தயாரிப்புகளிடமிருந்து உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் காவல்கவசமாகவும் இது செயல்படுகிறது.
இந்த உயரிய அங்கீகாரப் பட்டியலில், இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறப்பான இடத்தை பிடித்து வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விளையும் 74 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது பெருமைக்குரிய சாதனை.
சமீப காலத்தில்,உறையூர் பருத்திச் சேலை,கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை,நாமக்கல் கல்சட்டி,தூயமல்லி அரிசி,அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்று, தமிழ்நாட்டின் பாரம்பரியப் பெருமையை உலக அரங்கில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதுவரை பெற்றுள்ள 74 புவிசார் குறியீடுகளில்,கைவினைப் பொருட்கள் பிரிவில் – 38,விவசாயப் பொருட்கள் பிரிவில் – 24,உணவுப் பொருட்கள் பிரிவில் – 9,உற்பத்திப் பொருட்கள் பிரிவில் – ௩ எனப் பிரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுற்றுலாத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024 ஏப்ரல் வரை 58 பொருட்கள் மட்டுமே இந்த அங்கீகாரத்தை பெற்றிருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் மேலும் 16 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாட்டின் சாதனை பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது.இந்தப் பட்டியல், மாநிலத்தின் செழுமையான பாரம்பரியம், திறமையான கைவினைத்திறன், தனித்துவமான விவசாய வளம் ஆகியவற்றின் உயிர்ப்பான பிரதிபலிப்பாகத் திகழ்கிறது.
புகழ்பெற்ற கைத்தறிகள் முதல் பாரம்பரிய உணவுகள், தனிச்சிறப்பு விளைபொருட்கள் மற்றும் கைத்தொழில் தயாரிப்புகள் வரை, தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியின் தனித்துவ அடையாளத்தையும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் மேடையாக புவிசார் குறியீடுகள் விளங்குகின்றன.
இதன் விளைவாக, புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தப் போட்டியில், 77 பொருட்களுடன் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், 74 பொருட்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு… இன்று தனது மண் மணத்தையும், பாரம்பரியத்தையும், உழைப்பின் பெருமையையும் உலக அரங்கில் முத்திரை பதித்து கொண்டிருக்கிறது.
English Summary
From Uraiyur sarees Thooyamalli rice Tamil Nadu pride GI tag