ட்ரம்பின் வரிவிதிப்பின் எதிரொலி; பிரான்ஸ் அதிபர் - பிரதமர் மோடி கலந்துரையாடல்: இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் உலக நாடுகள்..!
French President and PM Modi talk on the phone
பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடன் இன்று தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு செய்துள்ளமை சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகின் முன்னணி நாடுகள் மத்தியில் அமெரிக்க எதிர்ப்பு மன நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான உறவு வலுப்பட்டுள்ளது. சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீனா, ரஷ்யா அதிபர்களும் கலந்துரையாடிய படம், உலகின் அனைத்து முன்னணி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் தலைவர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆகியோர் நேற்று மோடியுடன் தொலைபேசியில் உரையாற்றினார். இன்று ஐரோப்பாவின் முன்னணி நாடான பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் - மோடி உரையாடல் நடந்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உடன் கலந்துரையாடினேன். பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவு முன்னேற்றம் குறித்து இருவரும் ஆய்வு செய்தோம். உக்ரைன் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இந்தியா - பிரான்ஸ் இடையிலான ராஜதந்திரக் கூட்டணி தொடர்ந்து பாடுபடும். என்று பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்தியா செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
French President and PM Modi talk on the phone