யானைகள் மோதிய கோர சண்டை! நடுவில் சிக்கி துடிதுடித்த பெண் பலி...! - அதிரடியாக இழப்பீடு ரூ. 20 லட்சம் அறிவித்த வனத்துறை...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டம், இயற்கை எழில் பொங்கும் மலைப்பகுதிகளால் “இந்தியாவின் ஸ்காட்லாந்து” என அழைக்கப்படுகிறது. கூர்க் என்ற பெயராலும் பிரபலமான இந்த பகுதி, எண்ணற்ற சுற்றுலா தலங்களால் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக திகழ்வது துபாரே யானைகள் பயிற்சி முகாம் ஆகும்.

குஷால் நகரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த முகாமில், அடங்காத காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு கும்கி யானைகளாக மாற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 20-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இம்முகாமில் உள்ள யானைகள் உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவிலும் பங்கேற்று சிறப்பித்து வருகின்றன.

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த முகாமில், யானைகளை சுற்றுலாப் பயணிகள் நேரடியாக குளிப்பாட்டும் அனுபவத்திற்காக வனத்துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு தனித்தனி கட்டண முறைகளும் நடைமுறையில் உள்ளன.

அதோடு, யானை சவாரி வசதியும் வழங்கப்படுகிறது.இவ்வாறு புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் அங்கு வந்து கொண்டிருக்கின்றனர்.அதேபோல் நேற்று காலை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் முகாமில் திரண்டிருந்தனர்.

காலை 10 மணி அளவில், கும்கி யானைகளை காவிரி ஆற்றில் இறக்கி குளிப்பாட்டும் பணியில் வனத்துறை ஊழியர்களும் பாகன்களும் ஈடுபட்டிருந்தனர்.அப்போது “மார்த்தண்டா” என்ற பெண் யானை ஆற்றுக்குள் இறக்கப்பட்டது. தண்ணீரில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த யானையை பார்த்து, ஒரு தம்பதி தங்களது குழந்தையுடன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சில நிமிடங்களில், “கஞ்சன்” என்ற ஆண் யானையும் அதே பகுதியில் தண்ணீருக்குள் இறக்கப்பட்டது. எதிர்பாராத விதமாக கஞ்சன் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி மார்த்தண்டாவை தாக்கியது. அதற்கு பதிலடியாக மார்த்தண்டாவும் தாக்கியதால், இரு யானைகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

இந்த சம்பவத்தால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் பதற்றத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது நிலைதடுமாறிய மார்த்தண்டா யானை ஆற்றுக்குள் சரிந்தது. கணநேரத்தில் நடந்த இந்த பரபரப்பில், புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தம்பதியும் அவர்களது குழந்தையும் யானையின் அடியில் சிக்கினர்.

அதிர்ஷ்டவசமாக குழந்தையை கையில் பிடித்திருந்த கணவர் மேலே எழுந்து உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி மார்த்தண்டா யானையின் கீழ் சிக்கிக் கொண்டார். மனைவியை காப்பாற்ற கணவர் போராடியபோதும், கஞ்சன் யானை தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது.

கடும் போராட்டத்திற்குப் பிறகு அவர் மனைவியை வெளியே இழுத்து மீட்டார்.ஆனால், யானையின் அழுத்தத்தால் அந்த பெண்ணின் தலை ஆற்றில் இருந்த பாறைகளில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது. மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை உடனடியாக குஷால் நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மனைவியை இழந்த துயரத்தில் அவரது கணவர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் மனதை உலுக்கியது. தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகளும் காவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.விசாரணையில், உயிரிழந்தவர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த 33 வயதான ஜூன்ஸி என்பது தெரியவந்தது.

அவர் தனது கணவர் ஜோயல் மற்றும் குழந்தையுடன் சுற்றுலாவாக துபாரே யானைகள் முகாமிற்கு வந்திருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து ஜோயல் கண்ணீர் மல்க தெரிவிக்கையில், “நாங்கள் குடும்பமாக யானை அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது மற்றொரு யானை திடீரென தாக்கியதால் ஒரு யானை கீழே விழுந்தது. அதன் அடியில் சிக்கி என் மனைவி உயிரிழந்தார். அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாததால் உடனடி மருத்துவ உதவி கிடைக்கவில்லை” என உருக்கமாக தெரிவித்தார்.

சுற்றுலாவாக சென்ற இடத்தில் சென்னை பெண் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரத்திலும் மனிதநேயத்தை வெளிப்படுத்திய ஜோயல், தனது மனைவியின் கண்களை தானமாக வழங்க முன்வந்தார். அதன்படி, ஜூன்ஸியின் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டன. “என் மனைவி உலகை விட்டு பிரிந்தாலும், அவரது கண்கள் மூலம் மற்றொருவர் இந்த உலகை காண வேண்டும்” என்ற கணவரின் மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், துபாரே யானைகள் முகாமில் நடந்த இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஜூன்ஸியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக வனத்துறை அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fierce fight between elephants woman who caught middle and died Forest Department announced compensation 20 lakhs


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->