சமயபுரத்தில் பகீர் ‘ஹனி டிராப்’! இன்ஸ்டா மூலம் இளைஞர்களை வளைத்து, டீயில் மயக்க மருந்து கொடுத்து 7 சவரன் அபேஸ்...! - 3 கில்லாடி பெண்கள் கைது!
Honeytrap Samayapuram 7 Sovereign Abbess lured youths through Insta drugged them tea 3 women arrested murder
திருச்சி அருகே உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். தொலைதூர பகுதிகளில் இருந்து வருபவர்கள் பலரும் இரவு நேரங்களில் அங்குள்ள விடுதிகளில் தங்கி, மறுநாள் காலையில் அம்மனை வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த சூழலில், கோவிலுக்கு வரும் வசதியான இளைஞர்களை குறிவைத்து சிலர் கவர்ச்சி வலையை விரித்து, வெளியூர்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் மற்றும் நகை மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சமயபுரம் காவல்நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.

சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக இளைஞர்களுடன் பழகிய பெண்கள், அவர்களை சமயபுரத்திற்கு வரவழைத்து பிரபலமான விடுதிகளில் தங்க வைத்துள்ளனர். பின்னர் “உங்களை திருமணம் செய்து கொள்கிறேன்” என நம்பிக்கை வார்த்தைகள் கூறி, டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதை அருந்திய இளைஞர்கள் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டதும், அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் மதிப்புள்ள பொருட்களை அபகரித்து பெண்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சமயபுரம் காவலர்களிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பந்தப்பட்ட பெண்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சமயபுரம் அருகே உள்ள பணமங்கலம் பாலம் பகுதியில் 3 பெண்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கவனித்த காவல் ஆய்வாளர் தண்டாயுதபாணி, உதவி ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள், அவர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த முத்துலட்சுமி (47), சந்திரா (39) மற்றும் சிவகாசியை சேர்ந்த சுந்தரிதேவி (30) என்பது தெரியவந்தது. மேலும், சமயபுரத்தில் உள்ள பிரபல விடுதிகளில் தங்கி இளைஞர்களை மயக்கி நகைகள் பறித்துச் சென்ற சம்பவங்களிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து 3 பெண்களையும் காவலர்கள் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் 7 சவரன் தங்க நகைகளும் மீட்கப்பட்டன.இந்த பெண்கள் மீது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு காவல்நிலையங்களிலும் ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Honeytrap Samayapuram 7 Sovereign Abbess lured youths through Insta drugged them tea 3 women arrested murder