அக்டோபர் 26 முதல் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை..!
Direct flight service between India and China from October 26th
இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை இம்மாதத்தில் தொடங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து எதிர்வரும் வரும் 26-ஆம் தேதி முதல் கோல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு தினமும் விமானம் சேவை இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2020-இல் இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே அரசியல் முறுகல் நிலை உருவானது. அதன் காரணமாகவும் இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.
சமீபத்தில், இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,பிரதமர் மோடி சீனா சென்றார்.அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிலும் பங்கேற்றார்.

இதனிடையே, இருநாடுகளுக்குமிடையில், நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்து, இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூகமான முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து வரும் அக்டோபர் 26-ஆம் தேதி முதல் நேரடி விமான சேவையை தொடங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தனியார் விமான நிறுவனமான இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
'தூதரக ரீதியில் ஏற்பட்ட முடிவுகளை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு வரும் 26-ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்கும். டில்லியில் இருந்து குவாங்கு நகருக்கு விமான சேவையை துவக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த பயணத்திற்கு ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் பயன்படுத்தப்படும்.' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Direct flight service between India and China from October 26th