டெல்லி பிளாஸ்ட் மர்மம் உடைந்தது! உமர்–அலியின் ரகசிய திட்டத்தை NIA தகர்த்தது!
Delhi Blast Mystery Cracked NIA Uncovers Umar Alis Secret Plan
டெல்லியின் இதயப் பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.52 மணிக்கு நடந்த கார் வெடிப்பில் 13 பேர் உயிரிழந்து, 27 பேர் காயமடைந்தது, நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வெடிப்பு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல் என தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) உறுதி செய்துள்ளது.வெடிப்பை நடத்தியவர் டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டு, அவரது உடல் டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து காஷ்மீர்–அரியானா–உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவலாக டாக்டர்கள் மற்றும் சந்தேக நபர்கள் மீது அதிரடி கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.காஷ்மீரை சேர்ந்த டாக்டர் முசாமில், லக்னோவில் பெண் டாக்டர் ஷாகீன், அரியானாவின் மேவாட்டை சேர்ந்த மவுலவி இஷ்தியாக் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவத்தின் தாக்கமாக அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்துக்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், பஞ்சாப்பின் பதன்கோட் தனியார் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்த 45 வயது அறுவைசிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டார். இவர் முன்பு பரிதாபாத்தின் அல்-பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதும் தெரியவந்தது. அதே வழக்கில் அரியானாவின் நூ மாவட்டத்தில், அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு டாக்டர்களும் முன்பே பிடிபட்டுள்ளனர்.இந்நிலையில், உமருக்கு நேரடி உதவியாளராக இருந்த அமீர் ரஷீத் அலியை NIA நேற்று கைது செய்தது.
காஷ்மீரை சேர்ந்த இவர், உமருடன் சேர்ந்து சதி திட்டங்களை தீட்டியவர். வெடிக்கப்பட்ட கார் அலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டதுடன், உமரின் மற்றொரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் தற்கொலைப்படை முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் NIA தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அலி இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 10 நாள் NIA காவல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
English Summary
Delhi Blast Mystery Cracked NIA Uncovers Umar Alis Secret Plan