லடாக்கில் வெடித்துள்ள வன்முறை: 04 பேர் பலி; ஊரடங்கு உத்தரவு அமல்..!
Curfew imposed as violence erupts in Ladakh killing 4
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தத்தில், 04 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவரத்தை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் 05-இல் மத்திய பாஜ அரசு ரத்து செய்தது. இதனையடுத்து, அம்மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சியை வழங்கும் 06-வது அட்டவணை அந்தஸ்தும் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் என்பவர், 35 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், வன்முறை வெடித்துள்ளது. ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், போலீசார் வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தியுள்ளனர். அத்தோடு, லேவில் உள்ள பாஜ அலுவலகத்திற்கும் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இந்த சம்பவத்தை தடுக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலையச் செய்துள்ள நிலையில், இதுவரையில் 04 பேர் உயிரிழந்தனர். மேலும், 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Curfew imposed as violence erupts in Ladakh killing 4