மதம் மாறிய பிறகும் பட்டியலின சலுகைகளை அனுபவித்தால் சட்ட நடவடிக்கை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
Court orders legal action if Scheduled Caste people enjoy benefits even after converting to another religion
ஹிந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியவர்கள், பட்டியலினத்தவருக்கான சலுகைகளை தொடர்ந்து பெற்று வருவதை அனுமதிக்க முடியாது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கன்ஞ் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்த ஜிதேந்திர சஹானி என்பவர், தனது கிராமத்தை சேர்ந்த சிலரை கிறிஸ்துவ மதத்திற்கு மத மாற்றம் செய்ய முயன்றதாகவும், ஹிந்து மத நம்பிக்கைகள் பற்றி தரக்குறைவாக அவர் விமர்சித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு ஹிந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து அவமதித்து, புண்படுத்தி வந்ததால், சஹானி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராமத்தினர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து, சஹானி சார்பில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவை விசாரித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹிந்து சமூகத்தில் பிறந்த சஹானி, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியது சாட்சியங்களை விசாரித்ததில் தெரிய வருகிறது. தற்போது அவர் கிறிஸ்துவ மத போதகராகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னை ஒரு ஹிந்துவாகவே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
அப்படியெனில், அவர் சார்ந்த பட்டியலின ஜாதியின் சலுகைகளை அவர் தொடர்ந்து பெற்று வருவதாக தெரிகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், ஹிந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதத்தில் இருந்து பிற மதத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு, அரசின் சலுகைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, ஒருவர் மதம் மாறிய பின், முந்தைய ஜாதி நிலையிலேயே அவர் தொடர்வதை அனுமதிக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்ற தெரிவித்துள்ள நிலையிலும், அப்படி தொடர்ந்தால், அது அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் அலகாபாத் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சஹானி, மதம் மாறிய பிறகும் பட்டியலின ஜாதிக்கான சலுகைகளை பெற்று வருகிறாரா என்பதை மூன்று மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதோடு, அவர், ஒருவேளை ஜாதி அடிப்படையில் அரசின் சலுகைகளை அனுபவித்து வந்தால், சஹானிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், உ.பி., அரசின் தலைமைச் செயலர், கேபினட் செயலர், சமூக நலம் மற்றும் சிறுபான்மையினர்கள் நலத் துறையை சேர்ந்த உயரதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலம் தழுவிய அளவில் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஒருவர் மதம் மாறிய பிறகும், பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்படாமல், அதற்கான சலுகைகளை எத்தனை பேர் அனுபவித்து வருகின்றனர் என்பதை ஆய்வு செய்து, நான்கு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Court orders legal action if Scheduled Caste people enjoy benefits even after converting to another religion