தமிழ்நாடு மாநிலங்களவை இடைத்தேர்தல்; தவெக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பு மனு ஏற்பு..!
Congress candidate Praveen Chakravarty nomination paper accepted for the Tamil Nadu Rajya Sabha by election
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் கால அவகாசம் கடந்த ஜூன் 1ந் தேதி தொடங்கிய நிலையில் நேற்றோடு (ஜூன் 09) நிறைவடைந்தது.
இதற்காக காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட 14 பேர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதன்படி, தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தவிர மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். இதனால், அவர்களுக்கு எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாக உள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
''சட்டமன்றப் பேரவைச் செயலகம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு, மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க ஜூன், 2026-இல் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று (09.06.2026) ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஆய்விற்குப் பின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த பிரவின் சக்கரவர்த்தி அளித்த வேட்பு மனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பெற்றது. மேலும், 12 சுயேட்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் அறிவிக்கப்பெற்றது''எனத் தெரிவித்துள்ளது.
English Summary
Congress candidate Praveen Chakravarty nomination paper accepted for the Tamil Nadu Rajya Sabha by election