பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைத்துள்ள கேரளா அரசு: கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள்..!
Congress and allied parties strongly criticize the Kerala government for including it in the PM Shri scheme
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கவில்லை. இதனால், இந்த மாநிலங்களுக்கு சேர வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு கொடுக்காமல் இருந்து வருகிறது. இது குறித்து தமிழக எம்.பி-க்கள் பலமுறை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.
இதனையடுத்து ,தேசியக் கல்விக்கொள்கையில் இணைந்தால்தான் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்குமென்றால் எங்களுக்கு நிதியே தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு இருக்கிறது.
இந்த சூழலில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசாங்கம், கடுமையாக எதிர்த்து வந்தது. இந்நிலையில் கேரளா அரசு தற்போது தேசிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதியாகவுள்ள பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது: 'மத்திய அரசின் நிதி நிறுத்திவைக்கப்பட்டதால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்திருந்த 03 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கல்வி நிதியைப் பெறுவதற்கான வியூகமாகவே பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை கேரள அரசு ஏற்றுக்கொண்டதாக பொருள் அல்ல' என்று விளக்கமளித்துள்ளார்.
இருப்பினும் கேரள அரசின் முடிவை மாநில எதிர்க் கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அத்துடன், கூட்டணிக் கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் அவசரமாக பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்திருப்பது கூட்டணி அறத்தை மீறிய செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் பினாய் விஸ்வம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைவது தேசிய கல்விக் கொள்கையை கேரளாவில் அமல்படுத்த வழிவகுக்கும் என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அத்துடன், ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கமும் கேரள அரசின் முடிவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைந்ததன் மூலம், தற்போது தமிழ்நாடும், மேற்கு வங்கமும் மட்டுமே இணையாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இந்த பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், இன்னோவேஷன் கவுன்சில் போன்ற வசதிகளுடன் கூடிய முன்மாதிரிப் பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டு இருந்தார். அத்துடன், உங்கள் கம்யூனிஸ்ட் சகாவான பினராயி விஜயன் ஆளும் கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Congress and allied parties strongly criticize the Kerala government for including it in the PM Shri scheme