கூரியர் மூலமாக போதை மாத்திரைகள் வரவழைத்த கல்லூரி மாணவர்கள் கைது...! - 100 மாத்திரைகள் பறிமுதல்...!
College students arrested for bringing narcotics through courier 100 pills seized
சமூக வலைதளம் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து கூரியர் வழியாகப் போதை மாத்திரைகளை வரவழைத்து பயன்படுத்தி வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேரை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள், கூரியர் சேவை மூலம் போதை மாத்திரைகளை வரவழைத்துப் பயன்படுத்தி வருவதாக மன்னார்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறியத் தனிப்படைக் காவலர்கள் கடந்த சில வாரங்களாகத் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், மன்னார்குடி அருகே உள்ள எடைகீழையூரைச் சேர்ந்த தினேஷ் (20) என்ற கல்லூரி மாணவருக்குக் கூரியர் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதைத் தனிப்படையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, நேற்று அவரிடம் கூரியர் பொருள் ஒப்படைக்கப்பட்டபோது, காவலர்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நாக்பூரில் இருந்து போதை மாத்திரைகளை வரவழைத்து அவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், தினேஷ் தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், அவருடன் சேர்ந்து மேலும் சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளைப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்னால்டு (19), மன்னார்குடி பகுதியில் உள்ள கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் தமிழழகன் (19), தயாநிதி (19), மன்னார்குடியைச் சேர்ந்த சபரிநாதன் (19) ஆகியோரையும் காவலர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 மாணவர்களிடமிருந்து மொத்தம் 100 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், போதை மாத்திரைகள் எங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டன, அவற்றை விநியோகிப்பதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
College students arrested for bringing narcotics through courier 100 pills seized