ரூ.79 ஆயிரம் கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்..!
Central government approves procurement of defence equipment worth Rs 79 thousand crores
ஜம்மு-காஸ்மீர் ஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின்னர் நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், 79,000 கோடி ரூபாய் அளவுக்கு முக்கிய ராணுவ தளவாடங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 'நாக்' ரக ஏவுகணைகள், கடலில் இருந்து நிலத்திற்கு ராணுவ தளவாடங்களை வினியோகிக்கும், 'லேண்டிங் பிளாட்பார்ம் டாக்ஸ்' என்ற போர்க் கப்பல்கள், எலெக்ட்ரானிக் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

கடற்படைக்கு தேவையான அதி நவீன ரக துப்பாக்கிகள், நவீன இலகு ரக ஏவுகணைகள், இரவிலும் எதிரிகளின் இலக்கை கண்காணிக்கும் கருவிகள் ஆகியவை வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில், 'லேண்டிங் பிளாட்பார்ம் டாக்ஸ்' என்றழைக்கப்படும் போர்க்கப்பல்கள், கன ரக ஆயுதங்கள், கருவிகளை ஏற்றிச் செல்ல பயன்படும்.
மேலும், கடலில் இருந்து நிலத்திற்குள் படைகளை அழைத்துச் செல்வதற்கும், அவர்களுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை வினியோகிப்பதற்கும் இது பெரிதும் பயன்படும். அத்துடன், ராணுவ பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமைதி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் இந்த வகை கப்பல்கள் பயன்படும் என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Central government approves procurement of defence equipment worth Rs 79 thousand crores