ஜெகன் மோகன் ரெட்டியை 'சைக்கோ' என்று கூறிய பாலகிருஷ்ணா: ஆந்திர சட்டசபையில் சலசலப்பு..!
Balakrishna calls Jagan Mohan Reddy a psycho
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது.
ஆளும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வும், பிரபல நடிகரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை 'சைக்கோ' என சட்டசபையில் குறிப்பிட்டுள்ளமை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம், பா.ஜ., - எம்.எல்.ஏ., காமினேனி ஸ்ரீனிவாஸ் பேசுகையில், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. மெகா ஸ்டார் சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்.' என்று குறிப்பிட்டார்.

அப்போது இடையில் குறுக்கிட்ட நந்தமூரி பாலகிருஷ்ணா 'தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்,' என, ஜெகன் மோகன் ரெட்டியை குறிப்பிட்டார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெ கன் மோகன் சந்திக்க வந்ததாகக் கூறுவது பொய் என்றும் பாலகிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில், தொழில் துறை தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் அழைப்பிதழில், தன் பெயரை ஒன்பதாவது இடத்தில் சேர்த்ததற்காக, கூட்டணி கட்சியான ஜனசேனாவைச் சேர்ந்த திரைத்துறை விவகார அமைச்சர் கந்துலா துர்கேஷ் மீதும் அதிருப்தி தெரிவித்தார்.
இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், 'ஜெகன் மோகன் அழைப்பின் படியே அவரது வீட்டுக்குச் சென்றதாகவும், தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கியதாகவும், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்து பேர் மட்டுமே வர அறிவுறுத்தப்பட்டது என்றும் கூறினார்.

அத்துடன், அவர்களின் கோரிக்கையை ஏற்று, 10 பேரை சந்திக்க ஜெகன் மோகன் ஒப்புக்கொண்டதாகவும், இந்த குழுவில் சேர பாலகிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முயன்றோம், ஆனால் முடியவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, ஜெகன் மோகன் முயற்சியால், சினிமா டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, பாலகிருஷ்ணா தான் உண்மையான சைக்கோ. அத்தகைய நடத்தையில் அவரை யாரும் மிஞ்ச முடியாது எனவும், பெல்லம் கொண்டா சுரேஷ் துப்பாக்கிச்சூடு வழக்கில் மனநலச் சான்றிதழ் பெற்ற அவர், ஜெகன் மோகனை சைக்கோ என அழைப்பது நகைப்புக்குரியது என்றும், கூட்டணி அரசில் ஓரங்கட்டப்பட்டதால், பாலகிருஷ்ணா விரக்தியில் இப்படி பேசியிருக்கலாம் என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர ஜூபுடி பிரபாகர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Balakrishna calls Jagan Mohan Reddy a psycho