வெடிகுண்டு மிரட்டல்: பஹ்ரைன்-ஹைதராபாத் விமானம் நடுவானில் பறந்தபோது அதிர்ச்சி; மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்..!
Bahrain to Hyderabad flight makes emergency landing at Mumbai airport after bomb threat
பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகளுக்கு இ மெயில் வந்தது.
அதில் பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்து கொண்டு இருக்கும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக இது குறித்து விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக, முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக ஹைதராபாத் தரையிறங்காமல் வரும் வழியில் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு பாதுகாப்புடன் குறித்த விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புக் குழுவினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

விமானத்தில் நடந்த பல கட்ட சோதனைகளுக்கு பின்னர், வெடிகுண்டுகளோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகப்படும் படியான எந்த பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, அந்த மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர், அவர்களுக்கு எந்த அசௌகரியமும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Bahrain to Hyderabad flight makes emergency landing at Mumbai airport after bomb threat