உ.பி. அயோத்தியில் ஹனுமன்கிரி கோவில் துறவியை எரித்து கொல்ல முயற்சி: போலீஸ் விசாரணை..!
Attempt to burn to death a monk at Hanumangiri temple in Ayodhya Uttar Pradesh
அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோயில் அமைந்துள்ள நிலையில், அங்கு ஹனுமன்கிரி கோயிலும் உள்ளது. இந்த கோவிலின் ஆசிரமம் ஒன்று கோவிந்த் நகரில் அமைந்துள்ளது. இதில் மகேஷ்தாஸ் எனும் சுவாமி மகேஷ் யோகி தங்கியுள்ளார். இன்று அதிகாலை 02:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவரைக் கொல்லும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த ஆசிரமத்தின் வளாகத்தில் அடையாளம் தெரியாத சில நபர்கள் நுழைந்து அவரது அறையின் பின்புற ஜன்னலை வெட்டியுள்ளனர். அதன் பின்னர், அவரது அறையினுள் தீ பந்தத்தை எறிந்துவிட்டுத் தப்பியுள்ளனர். திடீரென பெட்ரோல் வாசனை வீசியதை உணர்ந்த மகேஷ் யோகி அதிர்ச்சியில் விழித்தெழுந்துள்ளார். பின்னர் உடனடியாக தீப்பிடித்தத் தகவலை போலீஸாருக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில், மகேஷ் யோகி ஆசிரமத்தில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது சீடர்கள் ஆசிரமத்தின் மற்றொரு பகுதியில் இருந்துள்ளனர். தகவல் கிடைத்ததும், காவல் துறை மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்து, அறையின் பின்புறத்தில் வெட்டப்பட்ட கிரில் மற்றும் பெட்ரோல் போன்ற வாசனையின் தடயங்களையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, சிசிடிவி காட்சிகள், கைபேசி அழைப்பின் விவரங்கள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது முன்விரோதம் காரணமாக செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Attempt to burn to death a monk at Hanumangiri temple in Ayodhya Uttar Pradesh