நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் குறித்து நாளை அறிவிப்பு..?
Announcement tomorrow regarding special revision work on the voter list across the country
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் கமிஷனர்கள் நாளை மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளனர்.
பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இந்த நடவடிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்ததும், வேறு மாநிலங்களுக்கு நிரந்தரமாக குடியேறியவர்களின் பெயர்களும் இருந்ததும் கண்டுப் பிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தயாராக இருக்கும்படி மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்ட்டுள்ளது. ஆனாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மாநில தேர்தல் அதிகாரிகளுடன், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது பீஹாரில் பின்பற்றப்பட்ட நடைமுறையை தற்போது கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் நாளை மாலை டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளனர். அப்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முதல்கட்டமாக விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Announcement tomorrow regarding special revision work on the voter list across the country