‘ரெயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுக்கு 3 சதவீத கட்டண சலுகை – ரெயில்வே அறிவிப்பு
3 percent discount on unreserved tickets through Rail One app Railways announcement
ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்த ஐஆர்சிடிசி (IRCTC), யூடிஎஸ் (UTS), என்டிஇஎஸ் (NTES) உள்ளிட்ட பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, ரெயில்வே அமைச்சகம் ‘ரெயில் ஒன்’ (Rail One) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட், ரெயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேர விவரங்கள், சீசன் டிக்கெட் பெறுதல், ரெயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிப்பது போன்ற பல சேவைகளை ஒரே இடத்தில் பெற முடிகிறது.
இந்நிலையில், ‘ரெயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு 3 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் ஏற்படும் கூட்டத்தை குறைத்து, செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த சலுகை வழங்கப்படுவதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தும் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த சலுகை, தற்போது ‘ரெயில் ஒன்’ செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆர்-வாலட் (R-Wallet) மூலம் பணம் செலுத்தும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத திருப்பிச் செலுத்தும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த புதிய சலுகை நாளை முதல் வருகிற ஜூலை 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
தென்னக ரெயில்வே மண்டலத்தில் தற்போது 29.5 சதவீத முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் செல்போன் செயலிகள் மூலம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதன் தொடர்ச்சியாக, சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூடிஎஸ் செயலியை பயன்படுத்தி வரும் பயணிகள், இனி ‘ரெயில் ஒன்’ செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என ரெயில்வே வலியுறுத்தியுள்ளது.
மேலும், செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்தபின் தொழில்நுட்ப காரணங்களால் பதிவு முழுமையடையாதது அல்லது தகவல் கிடைக்காதது போன்ற சூழ்நிலைகளில் அபராதம் விதிக்கப்படும் அபாயம் தவிர்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை பயணிகளுக்கு எளிதான, பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
3 percent discount on unreserved tickets through Rail One app Railways announcement