நோயாளிகள் அதிகம்… மருத்துவர்கள் குறைவு...! - அரசு பல் மருத்துவ சேவைகள் சிக்கலில்...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநிலத்தில் சிதம்பரம், சென்னை, புதுக்கோட்டைஆகிய இடங்களில் தலா ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு நிலைகளிலும் பல் மருத்துவப் பிரிவுகள் இயங்கி வருகின்றன.

மாநிலம் முழுவதும் தற்போது 565 அரசு பல் மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்து வருகின்றனர். பணிநிரந்தரம் வழங்கப்படாததால், பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நிலை நீடிக்கிறது.

அதே நேரத்தில், 2014 முதல் அரசு பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கூட சில துறைகளுக்கு மட்டும் 2023 வரை மட்டுமே பதவி உயர்வு நடைமுறையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் மற்றும் பல் மருத்துவர் பணியிடங்கள் பலவும் காலியாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக புதிய நியமனங்களும் இல்லை.மேலும், தருமபுரி, சிவகங்கை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 5 பல் மருத்துவர்கள் மீள் நியமனத்தின் மூலம் தாம்பரம் சாட்டிலைட் பல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல் மருத்துவத் துறைகள் மூடப்பட்டுள்ளன.நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பணியிடங்கள் குறைவு மற்றும் புதிய நியமனங்கள் இல்லாமை காரணமாக பல் மருத்துவர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கம் நேரடியாக நோயாளிகளின் சிகிச்சை தரத்திலும் பிரதிபலிக்கிறது.இதுகுறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை தெரிவிக்கையில், “மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்துள்ள நிலையில், பல் மருத்துவ பணியிடங்களை குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசாணை 293 மூலம் வழங்கப்படும் ஊதியப் படிகள் பல் மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வுகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறைக்கப்பட்ட பணியிடங்கள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.மொத்தத்தில், அரசுத் துறையில் பல் மருத்துவ சேவைகள் விரிவடைய வேண்டிய நேரத்தில், பணியாளர் பற்றாக்குறை மற்றும் நிர்வாக தாமதங்கள் சேவையை பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

More patient fewer doctors Government dental services trouble


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->