சாதாரணம் என அலட்சியம் செய்யாதீர்கள்! நீண்டநாள் மலச்சிக்கல் இதயத்தையும் தாக்கும் ஆபத்து...! - வாழ்க்கை முறையே காரணம் என மருத்துவர் எச்சரிக்கை
Dont ignore normal Long term constipation affect heart Doctor warns that lifestyle cause
மலச்சிக்கல் என்பது சாதாரண உடல் சிரமம் என்று பலர் எளிதாக எடுத்துக்கொண்டாலும், அது நீண்ட காலம் தொடர்ந்தால் ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக மருத்துவர் அருணாச்சலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இதை வலியுறுத்தி வருகிறார். தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம் அதிகரித்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சி இல்லாமை ஆகியவை மலச்சிக்கலின் பிரதான காரணங்களாக உள்ளன.

குறிப்பாக திங்கள் கிழமைகளில் வேலைச்சுமை, தூக்கமின்மை மற்றும் உணவு நேர மாற்றம் காரணமாக இந்த பிரச்சனை பலருக்கு அதிகரிக்கிறது.மலச்சிக்கலின் ஆரம்ப அறிகுறிகள் மெதுவாகத் தோன்றினாலும், அவை உடலின் முக்கிய எச்சரிக்கை சிக்னல்களாகும். மலமானது கடினமாக மாறுதல், தினசரி கழிவறை பழக்கம் குறைதல், வயிற்றில் நிரம்பிய உணர்வு, முழுமையாக வெளியேறாத சிரமம் போன்றவை பொதுவான அறிகுறிகள்.
இந்த நிலையை புறக்கணித்தால், அது மூலநோய், ஆசனவாய் கிழிவு போன்ற கடுமையான பிரச்சனைகளாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அழுத்தத்துடன் மலத்தை வெளியேற்றும் பழக்கம் இதயத்திற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, அரிதான சந்தர்ப்பங்களில் மாரடைப்பு அபாயத்தையும் உருவாக்கக்கூடும்.
இந்த பிரச்சனையை சமாளிக்க, வாழ்க்கை முறையில் சிறிய ஆனால் முக்கியமான மாற்றங்கள் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது குடல் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள் குடலின் இயக்கத்தை மேம்படுத்தும்.
வாழைப்பழம், பப்பாளி, ஓட்ஸ் போன்றவை இயற்கையான தீர்வுகளாக செயல்படுகின்றன. அதேசமயம், உடற்பயிற்சி இல்லாமை மலச்சிக்கலை மோசமாக்குவதால், தினசரி நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி அவசியமாகிறது.
மேலும், உடல் கொடுக்கும் சிக்னல்களை புறக்கணிக்காமல், மலத்தை தடுக்காமல் உடனடியாக கழிவறைக்கு செல்வது முக்கியம். ஒழுங்கான உணவு நேரம், எண்ணெய் மற்றும் ஜங்க் உணவுகளை குறைத்தல், காபி மற்றும் தேநீரை அளவோடு மட்டுமே உட்கொள்ளுதல் போன்ற பழக்கவழக்கங்கள் மலச்சிக்கலை கட்டுப்படுத்த உதவும்.மலச்சிக்கல் ஒரே நாளில் தீரும் பிரச்சனை அல்ல; அது நம்முடைய வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாகும்.
எனவே, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதே நிரந்தர தீர்வாகும். பிரச்சனை நீடித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம். சிறியதாக தோன்றும் இந்த சிக்கலை அலட்சியம் செய்யாமல் கவனித்தால், பெரிய நோய்களைத் தவிர்க்க முடியும் என்பது நிபுணர்களின் வலியுறுத்தலாகும்.
English Summary
Dont ignore normal Long term constipation affect heart Doctor warns that lifestyle cause