உலக மருத்துவ துறையை வியப்பில் ஆழ்த்தியுள்ள சீன விஞ்ஞானிகள்: எலும்பு முறிவு ஏற்பட்டால் 03 நிமிடத்தில் ஒட்டும் பசை கண்டுபிடிப்பு..!
Chinese scientists have invented a glue that can stick to a broken bone in 3 minutes
வெறும் 03 நிமிடங்களில் உடைந்த எலும்புகளை ஒட்டவைக்கும் மருத்துவ பசை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எலும்பு முறிவு சிகிச்சையின் போது, உடைந்த எலும்புகளை மீண்டும் இணைக்கவும், எலும்பியல் கருவிகளைப் பொருத்தவும் குறிப்பிட்ட பசையைக் கண்டுபிடிப்பது என்பது மருத்துவ உலகின் நீண்ட கால கனவாக இருந்தது.
கடந்த 1940-ஆம் ஆண்டுகளில் ஜெலட்டின் மற்றும் பிசின் கொண்டு உருவாக்கப்பட்ட பசைகள், உயிரியல் ரீதியாக உடலுடன் பொருந்தாத தன்மை காரணமாக நிராகரிக்கப்பட்டன. தற்போது சந்தையில் எலும்புகளை இணைக்கும் சிமெண்ட்கள் மற்றும் இடைவெளிகளை நிரப்பும் கலவைகள் பயன்பாட்டில் உள்ளது. அவற்றுக்கு உண்மையான ஒட்டும் தன்மை கிடையாது.

இந்நிலையில், சீன விஞ்ஞானிகள் புதிய பசையைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சர் ரன் ரன் ஷா மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் லின் சியான்ஃபெங் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ‘போன் 02’ என்ற புதிய மருத்துவப் பசையை உருவாக்கியுள்ளனர். அதாவது, கடலுக்கு அடியில் பாலங்களில் சிப்பிகள் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதன் மூலம் இந்த பசையை உருவாக்கும் எண்ணம் தனக்குத் தோன்றியதாக லின் சியான்ஃபெங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பசையானது, ரத்தம் நிறைந்த சூழலிலும் மூன்று நிமிடங்களுக்குள் உடைந்த எலும்புகளைத் துல்லியமாக ஒட்டவைக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. அத்துடன், ஒட்டப்பட்ட எலும்பு குணமடையும் போது, இந்தப் பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனால், சிகிச்சைக்குப் பின் பொருத்தப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும் ஆணிகளை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது. இதுவரை 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் இந்தப் பசை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உலோகத் தகடுகளுக்கு மாற்றாக இந்தப் பசை எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் தொற்று மற்றும் பிற அபாயங்களைக் குறைக்க முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
Chinese scientists have invented a glue that can stick to a broken bone in 3 minutes