நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து என்ன ஆச்சு...? திமுக மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்த விஜய்!
TVK Vijay trichy election campaign neet dmk
தவெக தலைவர் விஜய் தனது தமிழகம் முழுமையான மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்கினார். விமான நிலையத்தில் இருந்து தொண்டர்களின் உற்சாக வரவேற்பில் சுமார் ஐந்து மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அவர் மரக்கடை பகுதிக்கு வந்தடைந்தார்.
அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்த நிலையில் விஜய் பிரச்சார வாகனத்தில் நின்று உரையாற்றினார். “அரசர்கள் போருக்கு செல்லும் முன் குலதெய்வத்தை வணங்குவது போல, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனநாயகப் போருக்கு முன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். திருச்சியில் தொடங்குவது எப்போதும் ஒரு திருப்புமுனையாகும். அண்ணா முதலில் தேர்தலில் நின்றதும், எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியதும் இந்த மண்ணில்தான். பெரியாரின் கொள்கைகள் வாழ்ந்த இடம் இதுவே,” என்றார்.
அதனைத் தொடர்ந்து, “நீட் ரத்து செய்வோம், கல்விக் கடன் ரத்து செய்வோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறிய வாக்குறுதிகள் எங்கே? அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டனவா? பெண்களுக்கான உதவித் தொகை எல்லோருக்கும் சென்றடைந்ததா? இலவச பேருந்து பயணம் அறிவித்துவிட்டு ஓசி பயணம் என மக்கள் அவமானப்படுகிறார்கள். மக்கள் கேள்விகள் கேட்கும் போது அரசு அமைதியாக இருக்கிறது,” என அவர் வினவினார்.
மேலும், “நாம் அளிக்கும் வாக்குறுதிகள் கல்வி, மருத்துவம், சாலை, பெண்கள் பாதுகாப்பு போன்ற செய்யக்கூடியவற்றிலேயே இருக்கும்; அதில் சமரசம் எதுவும் இருக்காது” என்று உறுதியளித்தார்.
ஆனால் உரை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மைக்கில் கோளாறு ஏற்பட்டதால், அவரது பேச்சு கூட்டத்தில் இருந்த பலருக்கு கேட்கவில்லை. காலை முதலே எதிர்பார்ப்புடன் காத்திருந்த தொண்டர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.
English Summary
TVK Vijay trichy election campaign neet dmk