நாள் ஒன்றுக்கு 750 ரூபாயுடன் சமுதாய வளப் பயிற்றுநராக பணிபுரிய வாய்ப்பு!
thiruvallur govt training job
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநராக பணிபுரிய தகுதியான பெண்கள் குழு உறுப்பினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 15.
மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு மக்கள் கற்றல் மையம் என்ற உயர் நிலை கூட்டமைப்பின் துணை அமைப்பாக இந்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் சமூக அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு, நிதி, வாழ்வாதாரம், நிறுவன வலுப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஊரக அல்லது நகர்ப்புற சுயஉதவி குழுவில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவமுடையவர்களாக இருக்க வேண்டும். மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சமுதாய வளப் பயிற்றுநர்கள் ஆகியோர் தகுதி பெறுவார்கள். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 21 வயதானவர்களாகவும், பயிற்சிகளை நடத்த உடல் மற்றும் திறன் தகுதி கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்ட அனுபவம் இருக்க வேண்டும். கைப்பேசி செயலிகளைப் பயன்படுத்தத் தெரிந்திருப்பதும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பதும் அவசியம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தர அடிப்படையில் பயிற்சி நாள் ஒன்றுக்கு ரூ.750, ரூ.500 அல்லது ரூ.350 மதிப்பூதியம் வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்களை ஊராட்சி கூட்டமைப்பு அலுவலகத்தில் பெறலாம் அல்லது இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு திட்ட இயக்குநர், இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை வளாகம், திருவள்ளூர்-602001 அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகம், திருவள்ளூர் ஆகியவற்றை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
English Summary
thiruvallur govt training job