திமுக தலைமையின் முடிவால், அதிருப்தியில் மூத்த தலைவர்கள்! விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக செய்யப்பட்ட மாற்றம்!  - Seithipunal
Seithipunal


உதயநிதியின் பேராதரவு பெற்ற சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு அம்மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு பலரும் போட்டி போட்ட நிலையில் தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

திமுக சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளரான சிற்றரசு நியமிக்கப்பட்டது, திமுகவில் உதயநிதி ஸ்டாலினின் கை ஓங்கியுள்ளது என்பதற்கு சாட்சியாக அமைகிறது. இதனால் இதுநாள் வரை கட்சியை வளர்த்த மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

சேப்பாக்கம் பகுதி செயலாளர் மதன் மோகன், ஜெ.அன்பழகன் சகோதரர் ஜெ.கருணாநிதி, ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம், காரம்பாக்கம் கணபதி, கென்னடி என மேற்கு மாவட்டத்தை பிடிக்க பலர் முட்டி மோதினாலும் சிற்றரசுவை நியமிக்க வைத்துள்ளார் உதயநிதி. 

திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி என்பது குறுநில மன்னர்கள் போல அதிகாரம் மிக்க பதவியாகவும், அந்த மாவட்டத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் கட்சி இருக்கும். அப்படிப்பட்ட பொறுப்பினை கட்சியை வளர்த்த எத்தனையோ சீனியர்கள் இருக்க, இப்போது வந்த உதயநிதியின் செல்வாக்கில் இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசுக்கு கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

திமுக மேற்கு மாவட்டம் என்பது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, தி.நகர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், மயிலாப்பூர், மதுரவாயல் என 6  சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கியது ஆகும். கட்சியின் மற்றொரு மாவட்ட செயலாளரும் மூத்த தலைவருமான முன்னாள் மேயர் ம சுப்ரமணியத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தில் கூட ஐந்து தொகுதிகள் தான் இருக்கிறது. இதனால் சீனியர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படையாகவே வெளிப்படுத்த, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள பேரவை தொகுதிகள் மாற்றம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு மாவட்டத்தில் இருந்த மதுரவாயல் தொகுதி, மா.சுப்பிரமணியன் மாவட்ட செயலராக இருக்கும் சென்னை தெற்கு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 6 தொகுதிகளாக இருந்த சென்னை மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இனி 1.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி 2.ஆயிரம்விளக்கு 3.அண்ணா நகர்  4.தி.நகர்  5.மயிலாப்பூர் ஆகிய 5 சட்டமன்றங்கள் மட்டும் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு கட்டுப்பாட்டில் வருகின்றன

அதேபோல், சென்னை தெற்கு மாவட்டத்தில் இருந்த 5 தொகுதிகளோடு மதுரவாயலையும் சேர்த்து 6 ஆக இணைக்கப்பட்டுள்ளது அதன்படி  1.மதுரவாயல் 2.விருகம்பாக்கம் 3.சைதாப்பேட்டை 4.வேளச்சேரி 5.சோழிங்கநல்லூர் 6.ஆலந்தூர்  ஆகிய தொகுதிகள் மா.சுப்பிரமணியன் கட்டுப்பாட்டில் வருகின்றன. 

இருந்த போதிலும் கட்சியை வளர்த்த நாமெல்லாம் இருக்கோம் போதே, இப்போ வந்த உதயநிதியின் செல்வாக்கில் பொறுப்பு வழங்கப்படுகிறதே என திமுகவின் புலம்பலில் உள்ளனர். கடந்த வருடம் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி விருப்பமனு கொடுத்தவர் தான் புதிய மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்புக்கு வர இந்த ஒரு தகுதி போதாதா என்ன?! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Senior Oppose to appointment of Chennai west district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->