சங்க காலத்தை பறைசாற்றும் கீழடி... தமிழகத்தில் முதல் முறை... பிரம்மிப்பில் ஆராய்ச்சியாளர்கள்! - Seithipunal
Seithipunal


சிந்து சமவெளி நாகரிகம் என்பதுதான் மிகப் பழமையான நாகரிகம். எனவே அது முதலாம் நகர நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. இதில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும், கீழடி நாகரிகத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து 20கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்களி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.

அதிகளவில் செங்கல் வீடுகளும், வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.

சங்ககாலத்தை சேர்ந்த உறைகிணறு கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது. வீடுகள்தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.

குஜராத்தை சேர்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடர்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன.

வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.

மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகர்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

கீழடி அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் காலத்தால் மிகவும் முந்தையவையாக கருதப்படுகின்றன.

கீழடியில் பெண்கள் பயன்படுத்திய தங்கத்தாலான ஏழு ஆபரணத் துண்டுகள் கிடைத்துள்ளன. பல்வேறு மதிப்புமிக்க கற்களால் ஆன வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு பல விளையாட்டுப் பொருட்கள் குறிப்பாக ஆட்டக்காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை.

கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்பு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை.

அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்களின் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.

கீழடி ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

keeladi research images


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->