ஏமா(ற்)றுவது பல விதம்... இதுவும் ஒரு விதம்...! பயங்கரவாத மிரட்டலில் ரூ.21 லட்சம் பறிப்பு...! - வடமதுரையில் மூத்த குடிமகன் ஏமாற்றம்
21 lakh extorted through terrorist threats Senior citizen defrauded madurai
வடமதுரையில் மூத்த குடிமகனை குறிவைத்த நுாதன சைபர் மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் குணசேகரன் (69) என்பவரிடம், போலீசார் என போலியாக பேசிய மர்ம நபர்கள் ரூ.21 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி, குணசேகரனின் செல்போனுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை சென்னை கமிஷனர் அலுவலகத்தைச் சேர்ந்த ‘மனோஜ் குமார்’ என அறிமுகப்படுத்திக் கொண்டு,“உங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு 16 முறை பண பரிமாற்றம் நடந்துள்ளது” என கூறி அதிர்ச்சியூட்டியுள்ளார்.

இதுகுறித்து மறுநாள் லக்னோ போலீசார் தொடர்பு கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.அதன்படி, நவம்பர் 27ஆம் தேதி, லக்னோ தீவிரவாத தடுப்பு பிரிவில் இருந்து பேசுவதாக கூறிய நபர்கள்,“உங்கள் செல்போன் எண் மூலம் பயங்கரவாதிகள் தொடர்பு கொண்டு பணம் அனுப்பியுள்ளனர்” என மிரட்டினர்.
மேலும், பயங்கரவாதி அப்சல் குருவின் புகைப்படத்தை அனுப்பி,“இவரை உங்களுக்கு தெரியுமா?” என விசாரித்து மனஅழுத்தத்தை அதிகரித்துள்ளனர்.இதனுடன்,“இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என கடும் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமகன் என்பதால் சலுகை அளிப்பதாக கூறி,“ரிசர்வ் வங்கி ஆப் இந்தியாவுக்கு பணம் செலுத்தினால், விசாரணை முடிந்ததும் அரசாங்கமே வட்டியுடன் திருப்பி தரும்” என நம்ப வைத்துள்ளனர்.இதனால் அச்சமடைந்த குணசேகரன், தனது நகைகளை அடகு வைத்து முதல் நாளில் ரூ.16 லட்சம், மறுநாளில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட மோசடி நபர்கள்,“உங்கள் கணக்கில் பணம் செலுத்தி விட்டோம்” என கூறி அழைப்பை துண்டித்துள்ளனர். வங்கி கணக்கை சரிபார்த்தபோது பணம் வரவில்லை என்பதை அறிந்த குணசேகரன், தன்னை ஏமாற்றியிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த நுாதன சைபர் மோசடி தொடர்பாக, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
21 lakh extorted through terrorist threats Senior citizen defrauded madurai