உஷாரான சிவகார்த்திகேயன்!இது அண்ணன் - தம்பி பொங்கல்...பராசக்தி ஆடியோ லாஞ்சில் சிவகார்த்திகேயன் பேச்சு!
Sivakarthikeyan is alert This is brothers Pongal Sivakarthikeyan speech at Parasakthi audio launch
சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்ற ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், படம் குறித்தும், இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் குறித்தும் சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் தனது உரையைத் தொடங்கும்போது,“பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கேற்ற அளவில் இந்தப் படமும் பார்வையாளர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்குள் டைம் டிராவல் செய்து அழைத்துச் செல்லும் படமாக இது இருக்கும். மாணவர்கள் எப்போதுமே சக்திவாய்ந்தவர்கள். அவர்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த படம் அழுத்தமாகச் சொல்கிறது” எனக் கூறினார்.
படத்தின் உள்ளடக்கம் குறித்து சில கருத்துகள் வெளிவந்தாலும்,“பலரின் தியாகங்களை நேர்மறையாகவும் மரியாதையுடனும் பதிவு செய்திருக்கிறோம்” என அவர் விளக்கம் அளித்தார்.
இயக்குநர் சுதா கொங்கரா குறித்து பேசிய சிவகார்த்திகேயன்,“கொட்டுகாளி படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் சுதா மேம் என்னிடம் ஒரு காதல் கதையை சொன்னார். நான் ஏதோ பெரிய விஷயம் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சொன்ன ஒரே ஒரு வரி தான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அதற்கு மேல நான் சொல்ல மாட்டேன்” என ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
பின்னர் அவர் ஸ்கிரிப்ட் அனுபவத்தை பகிர்ந்து,“ஸ்கிரிப்ட் புத்தகம் ஆங்கிலத்தில் இருந்ததைப் பார்த்ததும், உடனே முடிச்சு படிக்க முடியாது என்று மீண்டும் கால் செய்ய வேண்டிய நிலை வந்தது. அடுத்த நாள் முழுசா படிச்ச மாதிரி நடிச்சுட்டு போயிருந்தேன்” என நகைச்சுவையாக பேசினார்.
சுதா கொங்கரா குறித்து பரவலாக உள்ள “ஸ்ட்ரிக்ட்” என்ற கருத்தைப் பற்றி கூறிய அவர்,“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகு தான் தெரிஞ்சது, அவர் சீன்களை முழுக்க ஆங்கிலத்தில், அதுவும் ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் மாதிரி விளக்குவார். அதை நான் சரியா ஃபாலோ பண்ண முடியல. ஒருநாள் நேரா சொல்லிட்டேன் – மேம், எனக்கு ஆங்கிலம் தான் பிரச்சனைன்னு. அதுக்குப் பிறகு அவர் சீன்களை முழுக்க தமிழிலேயே விளக்க ஆரம்பிச்சார். அவரிடமிருந்து கடுமையான உழைப்பு, முழு அர்ப்பணிப்பு ஆகியவற்றை கற்றுக்கொண்டேன்” என்றார்.
நடிகர் ஜெயம் ரவி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்,“உங்களை பார்த்ததும் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது. ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’ படத்தில் உங்கள் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் நடிக்க ரவி சார் ஓகே சொல்லிட்டாங்கன்னு சுதா மேம் சொன்னதும், ‘எது ஜெயம் ரவியா?’ன்னு ரியாக்ட் பண்ணிட்டேன்” என கூறினார்.
மேலும்,“தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி எவ்வளவு பவர்ஃபுல் வில்லனாக இருந்தாரோ, அதே மாதிரி பராசக்தியில் ரவி சார் ஒரு மிக சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். திரையில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாளையும் நான் மனதார ரசித்தேன்” என்றார்.
பொங்கல் வெளியீடுகள் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்,“33 வருஷமா ஒருத்தர் நம்ம எல்லாரையும் எண்டர்டெயின் பண்ணி இருக்கார். அதனால் ஜனவரி 9-ந் தேதி ‘ஜனநாயகன்’ பாருங்க, ஜனவரி 10-ந் தேதி ‘பராசக்தி’ பாருங்க. யார் என்ன வேணாலும் சொல்லட்டும். இது அண்ணன் – தம்பி பொங்கல்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
சிவகார்த்திகேயனின் இந்த உரை விழாவில் இருந்த ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், பராசக்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்தது.
English Summary
Sivakarthikeyan is alert This is brothers Pongal Sivakarthikeyan speech at Parasakthi audio launch